IPL என்னும் உலக சினிமா

Avengers:Infinity War(2018)

மார்வலின் பத்து வருட உழைப்பு.ரசிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமென நினைத்தார்களோ அதை கொடுத்துவிட்டார்கள்.அந்த படைப்பு எனது கண்ணோட்டத்தில் எப்படியிருந்தது என பார்ப்போம்.கதை Infinity Gauntletல் நடந்த கதைதான்.பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு(Big Bang) நிகழ்ந்த போது அதன் அடிப்படை சக்திகளைக்கொண்ட ஆறுகற்கள் தோன்றின.அவையான முறையே நேரம்,அண்டவெளி,மாய/நிஜ தோற்றம்,சக்தி,உயிர்,மனது/மூளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இக்கற்களை சாதாரண மனிதர்களால் கையாள முடியாது.டைட்டன் கிரகத்தை சேர்ந்த மியூட்டனான தானோஸ் என்பவன் இவ்வாறு கற்களையும் அடைந்து பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் எண்ணிக்கையை பாதிக்கு பாதியாக குறைக்க விளைகிறான்.அதை தடுக்க நினைக்கிறார்கள் அவென்ஜர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோக்கள்.விளைவு என்ன...

அப்படியே அம்புலிமாமாவில் வந்த கதைகளில் ஏதோ ஒன்றினை போல உள்ளதல்லவா?நம்மில் யாராவது இதைப்போன்ற கதையை சொன்னாலோ அல்லது எழுதினாலோ சல்லிகாசு கூட  பெறாது.இதே அமெரிக்கவாசிகள் எழுதி இயக்கினால் "வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாயா" என கைதட்டிக் கொண்டே பார்ப்போம்.நினைவிருக்கட்டும் இந்த அம்புலிமாமா கதைகள்தான் பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை வசூல் செய்யப்போகிறது.(ஏற்கனவே வசூலித்தும் இருக்கிறது).இதுதான் மேற்குலகினர் கற்பனாசக்திக்கு கொடுக்கும் மரியாதை.

ஆமாம்,படம் நன்றாகவே உள்ளது ஆனாலும் சில பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.Spoilers Alert.

தானோஸின் முன் கதை திருத்தமாக காட்டப்படவில்லை.இத்தனை ஹீரோக்களுக்கும் தனிதனிப் படங்களை தந்தவர்கள் இத்தனை பேரோடும் மல்லுக்கட்டப்போகும் கதாபாத்திரத்தின் கதையை சரியாக பின்னவில்லை.அதேவேளை புத்தகங்களில் தானோஸின் கதை கச்சிதமாக பின்னப்பட்டிருக்கும் ஆனால் இதில் சற்றே அறைகுறை.மேலும் தானோஸ் என்பவன் இதில் வில்லனேயில்லை.அவனது கிரகத்தில் சனத்தொகை பெருக்கத்தால் வளங்கள் குன்றி அத்தனை மக்களும் இறந்ததுபோல வேறு கிரகங்களிலும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்கிறான்.அவன் தன்னை ஏமாற்றுபவர்களை கொல்கிறான்.தன்னை எதிர்பவர்களோடு நேருக்கு நேர் நியாயமாக போராடுகிறான்.இந்த பிரபஞ்சத்தில் தான் நேசித்த அந்த ஒற்றை ஜீவனையும் தியாகம் செய்துவிட்டு கண்ணீர் விடுகிறான்.எதற்காக ஏனைய உயிரினங்கள் அடியோடு அழிந்து விடக்கூடாது என்பதற்காக.ஆக இது சிவில் ஃவோர் போன்ற இரு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களின் மோதலாக இருக்கிறதே தவிர பலம் பொருந்திய வில்லனாக இவன் வலம் வரவில்லை.

அத்தோடு நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் அத்தனை பேரையும் சமமாக காட்ட முடியாதுதான் ஆனால் நிறைய ஹீரோக்கள் டிரெய்லரில் வருவது போல் கொஞ்ச நேரமே வருகிறார்கள் அல்லது சொற்ப அளவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.ஒன்றிரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அடர்த்தியான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்.ஸ்டேரன்ஜ்,டைம் ஸ்டோனை பயன்படுத்தவேயில்லை.அப்படியே அதை தானோஸிடம் தூக்கி கொடுக்கிறார்.யாரேனும் இறந்தால் கூட டைம் ஸ்டோன் மூலம் மீட்டுவிடலாம்.ஆகவே அதுதான் மிகவும் முக்கியம்.அத்தோடு அவர் டோர்மாம்முவிடம் பயன்படுத்தியதைப்போல டைம் ஸ்டோனை பயன்படுத்த முயற்சி கூட எடுக்கவில்லை. மேலும் டாக்டர் or டொக்டர்.ஸ்டேரேன்ஜின் சக்தியின் மூலம் தானோஸின் உடலை வெட்டிவிடலாம்(அவனது உடலை இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு கடத்துவதன் மூலம்).ஆனால் அதையெல்லாம் படத்தில் அவர் பயன்படுத்தவேயில்லை.அத்தோடு க்ரூட் ஏன் எந்த நேரமும் கையில் கேம் பேடை வைத்து தட்டிக்கொண்டிருக்கிறது,கற்பனை வரட்சியா?

தோர்,பிண்ணியுள்ளார்.கிறிஸ்ன் அந்த ஒற்றை சிரிப்புக்கே படம் பார்க்கலாம் ஆனால் சகோதரன் இறந்தபோது கதறி அழுது சொற்ப நேரமே கடந்த பின்னர் சிரித்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.இறுதிகட்ட சண்டையிலும் காணாமல் போய் திடீரென மீண்டும் எங்கிருந்தோ குதிப்பதேனோ.இருந்தாலும் தோர் மட்டும்தான் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார்,மற்ற அனைவரையும் விட.தானோஸை வென்ற ஒரே கதாபாத்திரம் தோர்தான் என்பதை ஆணித்தரமாக புரியவைத்துள்ளனர். மேலும் நான் நினைத்தது போலவே கடவுளை கடவுளைப்போலவே மிகப்பொருத்தமாக காட்டியுள்ளனர்.

கண்டிப்பாக இதைப்போன்றதொரு படத்தை எடுப்பது மிகவும் கடினம்.முடிந்தளவு நியாயமாக எடுத்துள்ளார்கள் மேலும் தானோஸ் மற்றும் அவனது படைக்கு எதிராக தோர் ஒற்றையில் நின்று சண்டைபோடும் காட்சிகளை அருமையாக வழங்கியுள்ளனர்.இருப்பினும் படம் ஆரம்பித்ததில் இருந்தே மெதுவாகதான் செல்கிறது.அப்படியே திரைக்கதை கொஞ்சமாக ஆர்வமெழுப்பும் போது படம் முடிந்துவிடுகிறது.குறிப்பாக வாகாண்டாவில் நடக்கும் போர் காட்சிகள்தான் மெய்ன் ஹைலைட்ஸ்.அங்கேதான் படமே துவங்குகிறது என்பேன்.


அயன்மேனாக ரொபர்ட் மீண்டும் ஒரு தடவை அருமையாக நடித்துள்ளார்.இவரது நடிப்பு தனித்து தெரிகிறது.அடுத்த அவென்ஜர்ஸ் படத்திலும் இவர் வரப்போகிறார் என்பது நற்செய்தி.

இசை,நான் எந்தவொரு படத்திலும் மிகமுக்கியமாக கவனிக்கும் கூறுகளில் ஒன்று.இசைதான் படத்தின் குறைகளை தாங்குவதோடு நிறைகளுக்கு மேலும் வழு சேர்க்கும் கருவி.எனினும் இங்கு பாதி இடங்களில் இசை தேறவில்லை இருப்பினும் Frame by frame அருமையான CGயை கவனிப்பதிலேயே நேரம் செல்வதால் இந்த குறைகள் மறைந்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக தானோஸ் முழுக்கவே ஃகிராபிக்ஸ் என்பதை மறுக்க வைக்கிறது CG.

33% இட ஒதுக்கீடு போல பெண் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளும் காட்சியை அருமையாக வார்த்துள்ளார்கள்.அத்தோடு அத்தனை பெண் கதாபாத்திரங்களும் கெத்தாக நடித்துள்ளனர்.

ஹல்க் டிரெய்லரில் காட்டியது போல இதில் இல்லை.ஏமாற்றிவிட்டார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் டிரெய்லரில் காட்டிய சில சீன்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றமே.

சீரியஸான திரைக்கதையில் நகைச்சுவையை திணித்து உள்ளது தனியாக தெரிகிறது.கதையை அதை போக்கிலேயே விட்டிருக்கலாமே.ஏஜ் ஒஃப் அல்ட்ரான் போல தேவைப்பட்ட இடங்களில் மட்டும் நகைச்சுவையை தூவியிருக்கலாம்.

மேலும் படத்தில் எனக்கிருந்த பிர்ச்சினை,ஏற்கனவே காமிக்ஸ்களில் அழுந்தந்திருத்தமாக காட்டப்பட்ட நிகழ்வுகள் காட்சிகளாக்கப்பட்டிருந்ததால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.அதாவது யாருக்கு நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.குறிப்பாக தானோஸ் கமோராவின் மேல் அளவுகடந்த பாசம் வைக்கும் காட்சிகள்,நெப்புயுலாவை கொடுமைபடுத்துவது மற்றும் இறுதியில் காற்றில் கரையும் மனிதர்கள் போன்ற காட்சிகள்.

End creditsல் கேப்டன் மார்வலுக்கான வரேவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தின் முடிவு பாகுபலியை ஞாபகமூட்டியது என்பதே உண்மை.ஆக தோர் வரும் காட்சிகளுக்காகவும் கிராஃபிக்ஸ் துல்லியத்திற்காகவும் படத்தை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பார்க்கலாம்.

நமது உலகிலும் சனத்தொகை பெருகி விட்டது.வளங்கள் குன்றுகின்றன.எங்கு பார்த்தாலும் நோய்கள்.மனிதாபிமானமற்ற செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இங்கும் சனத்தொகையை குறைக்க வேண்டும்.குறைக்கவும் போகிறார்கள்.அதுவும் தானோஸ் வழியில்...புரியவில்லையா.மூன்றாம் உலகப்போர் விரைவிலேயே வரப்போகிறது,காத்திருங்கள்.

A.P:-Doctor.Strange டைம் ஸ்டோனை தானோஸுக்கு கொடுத்ததன் காரணத்தை கண்டறிய முடிந்தது.ஒரு கட்டத்தில் அவர் தானோஸை முறியடிப்பதற்கான வழிகளை எதிர்காலத்தை கணிப்பதன் மூலம் கண்டறிய முயல்வார்.அப்போது "மில்லியன் கணக்கான வழிகளில்(Possible ways) யோசித்தேன்,அதில் ஒரே ஒரு சாத்தியமான வழியை மட்டுமே கண்டறிந்தேன்" என்பார்.ஆக தானோஸை முறியடிக்கும் அந்த சாத்தியமான வழி டோனி ஸ்டார்க் மூலமே நிறைவேறப் போகிறது.அதானால்தான் டோனியின் உயிரைக்காப்பாற்ற டைம் ஸ்டோனை தானோஸிடம் கையளித்தார் போலும்.


தானோஸை வீழ்த்துவது எப்படி-Road to Infinity War


இன்ஃவினிடி வோர் என்னும் மிகப்பெரிய கதையை திரைப்படமாக கொடுக்க வேண்டும்,அதே நேரம் மார்வல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் முழுமையான புரிதலுடன் அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மார்வல் அயன்மேன்(2008) தொடங்கி நேற்று வந்த ப்ளாக் பேந்தர்வரை அழகாக ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தனர்.ஆக இன்ஃவினிடி வோர் படம் எப்படி இருக்கும்,என்னென்ன புதுமைகள் அதில் காட்டப்படலாம்,மார்வல்  இதுவரை இன்ஃவினிடி வோர் படம் பற்றி சிலேடையாக புரிய வைத்த விடயங்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.அத்தோடு தலைப்பில் உள்ளதற்கேற்ப தானோஸை எவ்வாறு இலகுவாக தோற்கடிக்கலாம் என்பதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

முதலில் ஆறு முடிவிலி கற்களின் அறிமுகத்தோடு தொடங்குவோம்.முதலில் லோகி கொண்டுவரும் ஸ்பேஸ் ஸ்டோன்.இதன் சக்தி அண்ட வெளியில் உள்ள அத்தனை இடங்களுக்கும் செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுப்பது,ஸ்பேஸ் ஸ்டோன் இப்போது லோகியின் வசமே இருப்பதாக ரக்னரோக் படம் மூலமும் கடைசியாக வந்த இ.வோர் முன்னோட்ட காட்சிகளின் மூலமும் அறியக்கூடியதாக உள்ளது.


இரண்டாவதாக பவர் ஸ்டோன்.பெயருக்கேற்றாற் போல அளவுகடந்த சக்தியை வெளிப்படுத்துவதுதான் இதன் வேலை.அத்தோடு ஏனைய ஐந்து கற்களின் சக்தியையும் இது அதிகப்படுத்தும்.பவர் ஸ்டோன் கடைசியாக நோவா கோர்ப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூன்றாவதாக ஈதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரியாலிட்டி ஸ்டோன்.இதன் சக்தி உண்மை தோற்றங்களை மறைத்து போலி பிம்பத்தை உருவாக்குவது.சிம்பிளாக சொன்னால் ரியாலிட்டியை கட்டுப்படுத்துவது.இது கலக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக மைண்ட் ஸ்டோன்.இது மனிதர்களின் மூளையை கட்டுப்படுத்துவதுடன் ஓரளவான சக்தியையும் வெளிபடுத்தக்கூடியது.இது விஷனின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக டைம் ஸ்டோன்.நேரத்தை கட்டுப்படுத்தும் இது முடிவிலி கற்களுக்கெல்லாம் ஒரு முடிவிலியை கொடுக்க கூடியது.ஏனைய கற்கள் அழிந்தாலும் இதனை கொண்டு காலத்தை பின்னிழுத்து அனைத்து கற்களையும் மீட்டு விடலாம்.இது ஐ ஒஃப் அகமோட்டாவில் வைக்கப்பட்டுள்ளது.இதனை பாதுகாப்பவர் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜ்.

இறுதியாக சோல் ஸ்டோன்.இது எங்கிருக்கிறது என காட்டப்படவில்லை. எனினும் சோல் ஸ்டோன் வாகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அத்தோடு வாகண்டா நாட்டினர் இறந்த மனிதர்களின் சோல்(உயிர்/ஆத்மா) உடன் தொடர்புகொள்வ முடிவதும் இக்கல்லின் சக்தியினால்தான் எனப்படுகிறது.

இந்த ஆறு கற்களும்/சக்திகளும் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு உருவாகியவை.இவை முடிவற்ற சக்தியை கொண்டிருப்பதால்தான் இன்ஃவினிடி ஸ்டோன்ஸ் எனப்படுகின்றன.இவற்றை சாதாரணமானவர்கள் கையாள்வது கடினம்.உதாரணமாக பவர் ஸ்டோனின் சக்தியை சாதாரண மனிதர் ஒருவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது.அது அவரையே அழித்துவிடும்.ஆனால் பல மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து பவர் ஸ்டோனை கையாளலாம்.


தானோஸ் என்பவன் இந்த ஆறு கற்களையும் ஒன்றிணைத்து,பிரபஞ்சத்திலேயே தான்தான் அளவற்ற சக்தியை உடையவன் என்பதை நிரூபிக்க நினைக்கிறான்.மார்வலின் ஆரம்பகால கட்ட கதைகளின் படி டெத்(மரணம்) என்பவளை கவருவதற்காகதான் இதனை அவன் செய்வதாக காட்டப்பட்டிருக்கும்.

தானோஸ் எப்படி கற்களை கைப்பற்றபோகிறான் என பார்ப்போம்.அவென்ஜர்ஸ் ஏஜ் ஒஃவ் அல்ட்ரான் படத்தின் இறுதியில் "I'll do it myself" என தானோஸ் கூறுவதுபோல் காட்டப்பட்டிருக்கும்.அதாவது அப்படத்தின் தொடக்கத்தில் அவென்ஜர்கள் அனைவரும் இறந்து கிடப்பதை டோனி ஸ்டார்க் தன் கனவில் பார்ப்பான்(அதில் கேசம் வெட்டப்பட்ட தோரும் இறந்து கிடப்பார்,இதே போன்ற ஒரு காட்சியை நாம் இன்ஃவினிடி வோர் படத்தில் பார்ப்தற்கான வாய்ப்புகள் அதிகம்).இதனால் மீண்டும் வானத்தில் இருந்து ஏலியன்கள்/வேற்றுலகினர் படையெடுக்கலாம் என கணிக்கும் ஸ்டார்க், அல்ட்ரான் எனும் புரோக்கிராமை உருவாக்குகிறான்.ஆனால் அந்த புரோக்கிராம் முழுதாக உருவாக்கப்படுவதற்கு முன்னரே செயற்பட தொடங்கிவிடும்.ஒருவேளை இது தானோஸின் வேளையாகக்கூட இருக்கலாம்.அவன் அல்ட்ரானின் மூலம் கற்களை ஒருங்கிணைக்க நினைத்து அந்த திட்டம் செயற்படாத காரணத்தினால் "I'll do it myself" எனக் கூறியிருக்கலாம்.


தானே முன்வந்து கற்களை ஒருங்கிணைக்க நினைக்கும் தானோஸ் முதலில் ஸ்பேஸ் ஸ்டோனை லோகியிடம் இருந்து பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.பவர் ஸ்டோன் நோவா கோர்ப்ஸிடம் இருந்து பறித்து கொள்கிறான்.இந்த தகவல் தெரிய பெற்றதும் கார்டியன்ஸ் ஒஃவ் த கலக்ஸி குழுவினர் தானோஸை தேடி புறப்படுவார்கள்.ரியாலிட்டி ஸ்டோன் கலக்டரிடம் இருந்து அபரிக்கப்படலாம்.மைண்ட ஸ்டோனை விஷனை கொல்வதன் மூலம் கையகப்படுத்திக்கொள்வான்.சோல் ஸ்டோனை தன் வசப்படுத்த ஒவுட் ரைடர்ஸ் எனப்படும் தனது ஏலியன் படையை வாகாண்டா நாட்டின் மீது ஏவிவிடுவான்.ஆனால் டைம் ஸ்டோன் கிடைப்பது எப்படி என்பதை கணிக்க முடியவில்லை.டாக்டர்.ஸ்டேரன்ஜ் டோர்மாம்மு எனப்படும் தானோஸை விட மிகப்பெரிய வில்லனையே டைம் ஸ்டோன் மூலம் எளிதாக தோற்கடித்தவர்.

அத்தோடு இன்ஃவினிடி வோரின் முதல் பாகத்திலேயே தானோஸ் டைம் ஸ்டோனை கைப்பற்றிவிட்டால் இரண்டாம் பாகத்தில்,முதற்பாகத்தில் இறந்த கதாபாத்திரங்களை மீட்டு கொண்டுவருவது என்பது இயலாத காரியமாகிவிடும்.ஆக டைம் ஸ்டோனை அவன் கைப்பற்றுவது இரண்டாம் பாகத்திலாகவும் இருக்கலாம்.

சரி,தானோஸை அவென்ஜர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்.முதலில் அயர்ன் மேன்.இவர் முதற் பாக முடிவில்/இரண்டாம் பாக முடிவில் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தானோஸிடம் இவரது பாச்சா பலிக்காது.தோர்,கண்டிப்பாக தோர் தனது புதிய ஆயுதமான மேஜிக் பெல்டின்(ஸ்பைடர் மேன்:ஹோம் கமிங்கில் இதைப்பற்றிய குறிப்புக்கள் உண்டு) துணை கொண்டு ஏதாவது செய்வார்.அத்தோடு அஸ்கார்டியன்களுக்கு வயதாக வயதாகதான் சக்திகள் கூடும்.ஆக டைம் ஸ்டோனை கொண்டும் தோரை அடக்க முடியாது.கேப்டன் அமெரிக்காவும் இறந்து போகலாம்.ஹல்க் தனது சக்திகளை இழந்து வெரோனிகா ப்ரோக்ராமின்(ஹல்க் பஸ்டர்) துணையுடன் போராடலாம் அல்லது அயன்மேனே தானோஸுக்கு எதிராக ஹல்க் பஸ்டரை பயன்படுத்தலாம்.
விஷனும் அழிக்கப்படுவது போல்தான் டிரய்லரில் காட்டியுள்ளார்கள்.

ஏன் அத்தனை கதாபாத்திரங்களுமே கூட இறந்து போகலாம்.ஆனால் டொக்டர்.ஸ்ட்ரேன்ஜின் உதவியுடன் இவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தானோஸை வீழ்த்துவது எப்படி?
அவென்ஜர்களால் தானோஸை எளிதாக வீழ்த்தி விட முடியும்.தானோஸ் பூமியில் கால்பதிக்கும் போதே டைம் ஸ்டோனின் மூலம் அவனை சுற்றியுள்ள நேரத்தை உறையவத்தார்களெனின் (Time Freeze) அதன் மூலமாக தானோஸையும் உறைய வைத்து விடலாம்.பின்னர் ஒவ்வொரு அவென்ஜராக வரச்சொல்லி தானோஸின் தலையை வேறாக காலை வேறாக பிரித்துமேய்ந்தால்,2 நிமிடங்களுக்குள்ளேயே படம் முடிந்துவிடும் அல்லது "Thanos,I've come to Bargain" என்றாலே போதும்.
ஆனால் அப்படியிருந்தால் கதையில் சுவாரஸ்யமேது.அதனால் கண்டிப்பாக மிகச்சிக்கலானதொரு திரைக்கதையைதான் ரூசோ சகோதரர்கள் பிண்ணியிருப்பார்கள் மேலும் தானோஸின் கதாபாத்திரம் அதிக பலம் வாயந்ததாக படைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.பத்து வருட உழைப்பில் கிட்டதட்ட 60 மேற்பட்ட ஐகோனிக் கதாபாத்திரங்களையும் 30க்கு மேலான சூப்பர் ஹீரோக்களையும் ஒரே திரையில் கொண்டுவரப்போகிறார்கள் எனும் போது,கண்டிப்பாக இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு மைல்கல்தான்.


சந்தோஷமாக நஞ்சுண்ணுங்கள்நார்மலாக மெடிக்கல் செக்கப் செய்ய மருத்துவமனை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.மருத்துவர் உங்களை பரீசோதித்து விட்டு "உங்களுக்கு லேசாகதான் சுகர் இருக்கு,இந்த மருந்த டெய்லி யூஸ் பண்ணுங்க சரியாகிடும்"னு 100mgல் ஒரு மருந்தை கொடுப்பார்.நாமும் ஒரு கிழமைக்கு அதை வாங்கி குடிப்போம்.அதுவும் சரியாகிவிடும்தான்.அதன் பிறகு ஒரு மாதத்திற்கு அந்த மருந்தையே தொட மாட்டோம்.தீடிரென உடல் பலவீனமானதுபோல் தெரியும் .மீண்டும் வைத்தியரிடம் சென்றால் "மருந்த ஸ்டொப் பண்ணாம குடிங்க,ஃபுட் ஹெபிட்ஸ் கன்ட்ரோலா இருங்க"னு அதே மருந்தை இந்த முறை 200mg எழுதி கொடுப்பார்.
(இங்கே நீங்கள் சுகருக்கு பதிலாக கொலஸ்ரோல்,உயர்/தாழ் குருதி அமுக்கம்,இளைப்பு,வயிற்றெரிச்சல் அல்லது உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எந்த நோயையும் போட்டுகொள்ளலாம்).

இந்த முறை நீங்கள் உணவு பழக்கத்தை கொஞ்சமாக கட்டுபடுத்துவீர்கள்.மருந்தையும் தொடர்ந்து குடிப்பீர்கள்.ஆனாலும் சுகர் ஏறும்.பத்து வருடங்கள் கழித்து உங்களால் உங்களுக்கு பிடித்த ஒரு உணவையும் சாப்பிட இயலாது.ஆனால் மருந்தின் அளவோ 800mg மாக மாறியிருக்கும்.இது மிடில் கிளாஸுக்கு, பணக்காரனுக்கோ தினமும் இன்சுலின்.

ஒரு குடிகாரனுக்கு எப்படி ஒரு கட்டத்திற்கு மேல் அவனே நினைத்தாலும் குடியை நிறுத்த முடியாமல் கைகள் நடுங்கி உடல் மெலிந்து அவனை  மரணம் வரை கொண்டு செல்லுமோ அதேபோல்தான் இந்த மருந்தும்.ஒரு நாள்,ஒரு வேளை நீங்கள் மருந்து குடிக்கா விட்டாலும் மயக்கம் வரும் தலை சுற்றும்.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாமே மெடிக்கல் ஷாப்பில் அந்த மருந்தின் பெயரை சொல்லி வாங்கிக்கொள்ள தொடங்கிவிடுவோம்.நமக்கெல்லாம் நாம் சாப்பிடும் பொருட்களிலேயே நோய்களுக்கான கரு இடப்பட்டுவிடுகிறது.பால்மா தொடங்கி அரிசி வரை அனைத்து சந்தைகளிலும் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு.நம்நாட்டில் தயாரிக்கும் பாலை விட வெளிநாட்டுபால்தான் நம் கண்களுக்கு தரமானது.Anchor பால்மாவில் DCD (Dicyandiamide) எனப்படும் வெடிப்பொருட்களை தீப்பற்ற வைக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை எரிபொருள் கலந்திருப்பதாக கூறி சில காலம் அரசு அதை தடைசெய்திருந்தது.இதே நிலைமைதான் Milgro என்ற நிறுவனத்திற்கும்.ஆனால் Anchor தடை நீக்கப்பட்டுவிட்டது(பாவம் Milgro நிறுவனத்திற்கு பெரிய பணபலமில்லை போலும்)

நமக்கு நம் பட்ஜெட்டிற்கு ஏற்றமாதிரிதான் நோய்களை தருகிறார்கள்.மாதமாதம் Rs.30000 செலவழித்து நம்மால் மருந்து வாங்க முடியாது.அதனால் நமக்கு Rs2000-3000 என நமது பட்ஜெட்டுக்கு பொருந்துகிற மருந்துகள்தான் விற்கப்படுகின்றன அல்லது வாங்கவைக்கப்படுகின்றன.நாம் தினமும் வாங்கும் பொருட்களுக்கேற்பவே நம் நோயும் மருந்தும் தீர்மானிக்கப்படுகிறது.

இதே பணக்காரன் 69 years Old வைன் போன்ற உயர்ரக பொருட்களையே தினமும் வாங்குவான்,அவனுக்கு தீவிரமான நோய்கள் வரும்.அப்போதுதானே அவன் விலைக்கூடிய மருந்தை நுகர்வான்.நல்ல சந்தைபடுத்தல் தந்திரமல்லவா?

நாம் பொருளை வாங்க வேண்டுமென விளம்பரம் செய்யவார்கள்,அதை நம்பி நாம் வாங்கினால் நோய் வரும்,நோய் வந்தால் மருந்து எடுக்க வேண்டும்,மருந்து கொடுப்பது யார் காப்பிரேட்டட் கம்பனி,நோய் முற்றினால் எடு லோனை,போடு வங்கிக்கு கோலை.வங்கியும் ஒரு காப்பரேட் நிறுவனம்தானே.அப்படி இல்லையா இருக்கவே இருக்கிறது இன்ஷுரன்ஸ்,இப்படியெல்லாம் நமக்கு நோய் வரும் என அறிந்து எப்போதோ நம்மை இன்ஷுரன்ஸ் எடுக்க வைத்து விடுவார்கள்.இன்ஷூரன்ஸ் அதே கூட்டிணைக்கப்பட்ட கம்பனி,எடுத்த காசை மருத்துமனையில் கட்டு,காசை கட்டியபின் தரும் ரசீதில் மருத்துவமனையின் பெயரை நன்றாக உற்று பார்.XYZ(Pvt)ltd என்றிருக்கும்.

ஆக மொத்தம் யார் யாரோ ஒரு சிலர் சந்தோஷமாக இருப்பதற்காக நாம் முதலீட்டாக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் நம்வாழ்வின் சாராம்சமே.

Guardians of the Galaxy: The Telltale SeriesTelltale game seriesகள் விளையாடியுள்ளீர்களா,ஆஹா ஓஹோ என்ற கிராஃபிக்ஸ் எல்லாம் இவர்கள் வெளியிடும் கேம்களில் எதிர்பார்க்க முடியாது,இவர்களது தனித்தன்மையே ஸ்டோரி லைன்தான்.நமது ரசனைக்கு ஏற்றாற்போல் தெரிவுகளை மேற்கொண்டு நமக்கு பிடித்தமான விதத்தில் நகரும்படியான Tailor-Made கதைகளைக் கொண்ட கேம்களை உருவாக்கும் நிறுவனம்தான் இந்த Telltale.

அண்மையில் இவர்களது வெளியீடுகளில் ஒன்றான் கார்டியண்ஸ் ஒஃப் த கலக்ஸி கேமினை விளையாட நேர்ந்தது.கிட்டதட்ட ஒரு திரைப்படம் பார்ப்பது போல்தான் இருந்தது.கண்ட்ரோல்களும் மிகக்கடினமாக இல்லை.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் முதற்கொண்டு கதையோட்டம் வரை நாமே தெரிவுசெய்து விளையாடாலாம்.கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கேமிங் அனுபவமாக இருந்தது.


கதைப்படி,நோவா கோர்ப்ஸ் இடமிருந்து GoG குழுவிற்கு அவசர அழைப்பொன்று வருகிறது.தானோஸ் தங்களை தாக்கிக்கொண்டிருப்பதாகவும் விரைந்து வந்து உதவுமாறும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.இதன்படி பீட்டர்,ராக்கெட்,கெமோரா,ட்ராக்ஸ் மற்றும் கூருட் ஆகிய ஐ நாயகர்களும் தானோஸை தேடி புறப்படுகின்றனர்.தானோஸை இவர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே நோவா கோர்ப்ஸ்களை அவன் கொன்றுவிடுகிறான்.பின்னர் GoGயுடன் நடக்கும் மோதலில் ராக்கெட்டின் ஆயுதத்தின் உதவியுடன் தானோஸ் வீழத்தப்படுகிறான். மோதலின் பின்னர் தானோஸ் வசமிருந்த Eternity Forge எனப்படும் சக்தியை GoGயினர் மீட்கின்றனர்.

தானோஸை வீழ்த்தி வெற்றிபெற்றதை கொண்டாட நோ வெயார் (Knowhere) என்ற பகுதிக்கு செல்லும் இவர்கள் அதன்பின் சந்திக்கும் சம்பவங்களும் சவால்களும்தான் கதையாக நீள்கிறது.

தொடக்க அத்தியாயமே தானோஸின் தோல்வியுடன்தான் தொடங்குகின்றது என்பதால் அடுத்து கதை எவ்வாறு நகரப்போகிறது என்ற ஆர்வம் மேலெழாமல் இல்லை.

முதலில் குறிப்பிட்டது போலவே நிறைய கண்ட்ரோல்களை கொடுத்து நம்மை விழிபிதுங்க செய்யவில்லை.அதனால் கேமுடன் இலகுவாக ஒன்றிவிடமுடிகிறது.

ஆன்ராய்ட் மற்றும் IOS ஆகியவற்றிலும் இதனை நிறுவி விளையாடமுடியும்
மார்வலின் கார்ட்டியன்ஸ் ஒஃப் த கலக்ஸி கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்தவர்களும் வித்தியாசமான கேமிங் அனுபவத்தை உணர விரும்புவர்களும் இதனை விளையாடி பார்க்கலாம்.

Pretty Little Liars


நள்ளிரவு நேரம்,சுற்றிலும் நிசப்தம்.இருள் போர்த்திய ஒரு குடிலில், ஆரியா,ஹண்ணா,எமிலி,ஸ்பென்ஸர் மற்றும் எலிசன் ஆகிய ஐந்து கல்லூரி நண்பிகளும் ஆழந்த உறக்கத்தில் இருக்கின்றனர்.திடீரென துயில் கலையும் எலிசன் குடிலிக்கு வெளியே செல்கிறாள்.மணித்துளிகள் கரைகின்றன.கண்விழித்து பார்க்கும் ஏனைய நால்வரும் எலிசனை காணாததையடுத்து அவளை தேடி செல்கின்றனர்.ஆனால் அவர்களால் அவளை கண்டிபிடிக்க முடியவில்லை.அவள் திரும்பவும் வரவில்லை.

நாட்கள் சுழன்றோடுகின்றன.
ஆரியா ஐஸ்லாந்திலிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்ப வருகிறாள்.ஐஸ்லாந்தில் அவளுடன் நண்பனாகிய அதே ஆடவன் இங்கே அவளது கல்லூரியில்  ஆங்கில ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியம் அடைகிறாள்.அவ்வாசானுக்கும் அந்நிலைமையே.அதேநேரம் தனது அம்மாவை ஏமாற்றிய காரணத்திற்காக தந்தை மீது அதிருப்தியாக இருக்கிறாள் ஆரியா.

ஹன்னா நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்தாலும் அவளது அதீத ஆசைகளும் பழக்கவழக்கங்களும் அவளையும் அவளை சுற்றி உள்ளவர்களையும் பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றன.

எமிலியின் பக்கத்துவீட்டிற்கு புதியதாக மாயா எனும் பெண் குடிவருகிறாள்.எமிலியும் அவளும் விரைவிலேயே நண்பிகளாகின்றனர்.

ஸ்பென்சர் எப்போதும் போலவே உறுதியற்ற முடிவுகளோடு வாழ்க்கையை கொண்டு செல்கிறாள்.

இவ்வாறான சமயத்தில்தான் அலிசனின் சடலம் கிடைக்கப்பெறுகின்றது.அதே நேரம் ஏனைய நால்வரது தொலைபேசிகளுக்கும் ஒரு குறுஞ்செய்தியும் வருகிறது."உங்களது இருண்ட ரகசியங்களை நான் ஒவ்வொன்றாக வெளிக்கொணர்வேன்-இப்படிக்கு A" என்பதை போலமைந்த அக்குறுஞ்செய்தியை கண்டு அவர்கள் திடுக்கிடுகின்றனர்.


தொடர்ந்து இந்நால்வரினது வாழ்க்கையிலும் நடந்த ஒவ்வொரு ரகசியங்களும் Aயினால் பொதுவில் திரைநீக்கப்படுகிறது.இவ் இக்கட்டான சூழலை அந்நால்வரும் எப்படி கையாளுக்கின்றனர்.A என்பது யார்?தமது உற்ற தோழியான அலிசனை கொன்றவர்களை/னை/ளை இவர்கள் கண்டுபிடித்தனரா?என்பதே 22 அத்தியாயங்களை கொண்ட இத்தொடரின் நீட்சியாகும்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதுபுதிதாக அடுக்கடுக்காக கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்கின்றன.ஆனால் அவ்வனைவரையும் நம்மால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவது அதிசயமே.22 எபிசோட்கள் என்பதால் சில சம்பவங்களை நீளமாக்கி காட்சிபடுத்தியுள்ளது போல் தோன்றினாலும் ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் புதிதாக ஒரு முடிச்சை இட்டு அடுத்த அத்தியாயத்தை பார்ப்பதற்கான ஆவலை தூண்டுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் தயாரிப்பு குழுவினர்.

சாரா ஷெப்பர்ட் எழுதிய இதே பெயரிலமைந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்தொடரை மேம்படுத்தியவர் ஐ.ம்.கிங்க்(Ina Marlene King) என்ற பெண்மணியாவார்.

இருபத்திரண்டு நாட்களுக்கேனும் அழுகைராணி தொடர்களை ஓரங்கட்டிவிட்டு இவ் அழகிய பொய்யர்களை பின்தொடரலாமே.

A:P:-இதன் 7வது சீசன் Z cafeல் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.இதுவே இத்தொடரின் இறுதி பருவம் என தயாரிப்புகுழுவினர் அறிவித்துள்ளனர்.