Frozen (2013):3D

10:12 PM Kavinth Jeev 0 Comments

வணக்கம் அன்பர்களே,


எனக்கும் முப்பரிமானப் படங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றுதான் கூற வேண்டும்.நில ஆக்கிரமிப்பை பற்றிப் பிரமாண்டமான...இல்லை இல்லை...பிரமாண்டமான வடிவில் பேசிய அவதார் திரைப்படமானது என் மனம் எனும் நிலத்தில் ஒரு சத வீதத்தைக் கூட ஆக்கிரமிப்புச் செய்யவில்லை(ஆனால் அவதார் திரைப்படத்தின் அதே கருவை திரைக்கதையிலும் சரி தரத்திலும் சரி மிகவும் திறம்பட அவதாரை விடப் பன்மடங்கில் சிறப்பாக எடுத்து இயம்பி இருந்த ஆயிரத்தில் ஒருவன் கண்ட தோல்வியும் வரலாறு காணாததே.அப்படத்தின் ஒரே குறை அப்படம் முழுக்க முழுக்கத் தமிழூற்றில் நனைத்து எடுக்கப்பட்டது என்பதே ஆகும்.அதுவே அப்படத்தின் தனிச் சிறப்பாய் நான் கருதுகிறேன்).எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய மோசமான படங்களில் மிக முக்கியமான இன்னொரு படம்தான் Man Of Steel.நெட்டிசன்கள் அனைவரும் அதை ஏற்கனவே கழுவி (கழுவி)ஊற்றி விட்டதால் நான் அதைப்பற்றி மேலும் செப்ப விரும்பவில்லை.மேலும் ஃபாக்ஸ் ஸ்டாரின் Epic எனக்கு ஒரு epicகாண வெறுப்பினை ஏற்படுத்தி இருந்தது."3d படமா!?சேச்சே இந்தப் படம் புளிக்கும்" என்று எனக்குள் இருந்த சிந்தனையைச் சற்றே மாற்றிய பெருமை 'ஜுராசிக் வேர்ல்ட்'டுக்கே சாரும்.இவ்வாறு இருக்கையில் புதிதாக வாங்கிய முப்பரிமாண தொலைக்காட்சியில் நான் பார்த்த படம்தான் இந்த Frozen(உறைதல்).

இளவரசி எல்சாவுக்கு இயற்கையிலேயே ஒரு சக்தி உள்ளது.அதுதான் உறைய வைப்பது.ஆனால் அவளுக்கு அதைக் கட்டுபடுத்த முடிவதில்லை.ஒருநாள் தனது சகோதரி ஆனாவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது தவறுதலாகத் தனது சக்தியின் விளைவால் அவளது தங்கையை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்று விடுகிறாள்.மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் நடப்பதை விரும்பாத அவர்களது பெற்றோர்கள் எல்சாவை ஓர் தனி அறைக்குள் அடைத்து அதிலேயே அவள் வாழும் வண்ணம் செய்து விடுகின்றனர்.இளவரசி ஆனாவும் கோட்டைக்குள்ளேய அடைந்து விடுகிறாள்.பின்னாட்களில் ஒரு விபத்தில் மன்னனும் அரசியும் இறந்து விட அடுத்த அரசியாக எல்சா அறிவிக்கப்படுகிறாள்.ஆனாலும் குறிப்பிட்ட வயது வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும்.அந்த நாளும் வருகிறது.கோடைக் காலமும் கூடுகிறது.நாடே கொண்டாட்ட களமாக மாறுகிறது.அவ்வேளையில் பல வருடங்களின் பின் வெளி உலகை கண்டிராத இளவரசி ஆனா சந்தோசக் களிப்பில் வெளியில் உலாவுகிறாள்.அப்போது விழாவிற்கு வந்திருக்கும் அண்டை நாட்டு இளவரசன் பால் கண்டவுடன் காதலில் விழுகிறாள்.இதை தனது சகோதரியும் அரசியுமான எல்சாவிடம் கூறுகிறாள்.ஏற்க மறுக்கும் எல்சா கோவமும் கொள்கிறாள்.நமது ஹல்க் எவ்வாறு கோபம் கொண்டவுடன் பக்கத்தில் யார் இருந்தாலும் அடித்துத் துவம்சம் செய்வானோ அதே போல்தான் இவளும்.கோடைக் காலத்தையே கடுங்குளிர்காலமாக மாற்றி விட்டு காட்டிற்குள் தப்பி ஓடி விடுகிறாள்.அவளைத் தேடி ஒரு பனியில் வாழும் இளைஞனின் உதவியுடன் புறப்படுகிறாள் தங்கை ஆனா.மெல்லிய ஸ்பரிசம் போல் காதலைப் பற்றியும் பேசுகிறது இப்படம்.நல்லதொரு ட்விஸ்டும் கதையில் உள்ளது.அது யாதெனில்....படத்தைப்பார்த்தே தெரிந்து கொள்ளுங்களேன்.

3Dயில் காட்சிகளனைத்தும் வேற levelலில் உள்ளது.எல்சாவை விட ஆனவையே எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.எல்சாவை பிடிக்கவே இல்லை என்று கூட சொல்லலாம்.அதேவேளை அடிப்படையில் இருவருமே நல்லவர்கள் என்பதையும் நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.இசைக்கோர்ப்பும் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன.அதிலும் ஆனா பாடும் "For the first time in forever" என்னும் பாடலானது மீண்டும் மீண்டும் காதில் எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது.அனிருத்தின் இசையைக்(!??) கேட்டு விட்டு இவ்வாறன பாடல்களைக் கேட்பது ஓர் அலாதியான அனுபவம்தான்.
                                                     
 மிகப்பெரிய பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு பில்லியனுக்கு மேல் வசூலும் புரிந்துள்ளது.அனிமேஷன் மூவிக்களை விரும்பும் நபரில் நீங்களும்(என்னைப் போல்) ஒருவர் ஏன்றால் கண்டிப்பாகப் பார்த்து விடுங்கள்.ஓர் புதிய அனுபவத்தை நிச்சயம் இது உங்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்..!
                                                                                               

0 comments: