Related posts

Breaking News

தோர்கல்:மூன்றாம் உலகம்


தமிழில் சித்திரக் கதைகள் வெளியிடப்படுவதே அரிதாகி விட்ட நிலையில் மாயஜாலங்கள் நிறைந்த, கண்களுக்கு குளிர்ச்சியான ஓவியங்களைக் கொண்டமைந்த ஒரு சித்திரக்கதை தமிழில் கிடைப்பதென்பது அரிதிலும் அரிது.அப்பேர்ப்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் இன்று அமைந்தது.ரோசின்ஸ்கி என்பவரது கை வண்ணத்திலும் நாமறிந்த ஜீன் வான் ஹாமேயின் கதை வண்ணத்திலும் தோன்றிய சித்திரக் கதை தொடர்தான் தோர்கல்.ஆரம்ப காலங்களில் டின்டின் காமிக்ஸ் இதழ்களில் தோர்கல் தலைகாட்டியுள்ளார்.பின்னர் தனித்தொடராக வெளியிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றது.ஒரு சில வருடங்களுக்கு முன் இத்தொடரை அடிப்படையாகக் கொண்டு வீடியோ கேம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

கடவுளின் மகனான தோர்கல் தன் விண்கப்பலுடன் பூமியில் வீழ்கிறான்.வைக்கிங்குகள் எனப்படுபவர்களால் வளர்க்கப்படும் இவன் எதிர்பாரா ஒரு விபத்தில் தன் அடையாளங்களை மறந்து நாடோடியாகத் திரிவதும் பின்னர் தன்னைப் பற்றிய உண்மைகளை கண்டறிவதும்தான் தொடரின் அடிநாதம்.
இன்னும் இலகுவாக சொல்லப்போனால் இரத்தப்படலத் தொடரை ஒரு மாயஜால கதையாக மாற்றினால்,அதன் பெயர்தான் தோர்கல்.

இதுவரை நான் தோர்கல் கதைகளை படித்ததில்லை.தொடர் கதையில் வந்த ஒரு இதழைப் படிப்பதனால் கதை விளங்காது ஓரிரு பக்கங்களிலேயே கடையை மூட நேரிடுமோ என்றுதான் ஆரம்பத்தில் எண்ணினேன்.இதுவரை பல்வேறு களங்களிலான பல்வேறுப்பட்ட கதைவரிசைகளை படித்த அனுபவத்தால் அந்த நிலைமையை பெரும்பாலும் தவிர்க்க முடிந்தது.

தோர்கல்:மூன்றாம் உலகம்




ஒரு பொழுது சாப்பிடுவதற்கே வழியின்றி  அல்லல்படுபவன்தான் நம் கதையின் நாயகன் தோர்கல்.இவரைத் தேடிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார்.தோர்கல் உணவருந்த வரும் சத்திரத்திற்கு வரும் அம்முதியவர் தோர்கல் பற்றி விசாரிக்கிறார்.அவனைப் பற்றி பல வீரதீர கதைகளை அங்கிருப்பவர்களிடம் கூறுகிறார்.என்னைப் போலவே கடுப்பாகின்றனர் அங்குள்ளவர்கள்,விடயம் தெரியாமல் உள்ளே வரும் தோர்கலை கலாய்த்தே காலி பண்ணுகிறார்கள்.அதிலும் அதிகமாக உணர்ச்சி வசப்படும் ஒருவன் தோர்கலிடம் உள்ள மந்திர உலகுக்கான சாவியை கைகளால் பிடித்து இழுக்கிறான்.கைகளில் சாவியை ஏந்திய அடுத்த கணமே செதில் செதிலாக நொறுங்கி போகிறான்.இதனைக்கண்டு ஏனையவர்கள் பீதி அடைகிறார்கள்.தோர்கலை அழைத்துக் கொண்டு முதியவர் தப்பியோடுகிறார்.கூடவே தோர்கலைப் பராமரித்துக் கொள்ளும் இளம் பெண்ணும் அவனுடனேயே வருகிறாள்.பாதுகாப்பான பிரதேசத்தை அவர்கள் அடைகின்றனர்.முதியவர் தோர்கலுக்கு பழைய ஞாபகங்களை மீளெழச் செய்கிறார்.தோர்கல் ஒரு மாவீரன் என்பதையும் அவனது மனைவியும் குழந்தையும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனையும் அறிந்து கொள்கிறான்.அங்கே இன்னொருவரும் உள்ளார் அவரது பெயர் காலதார்ன்.தோர்கலுடன் உரையாற்றும் அவர்,தோர்கல் தனது மனைவி மக்களை மீட்க வேண்டுமெனில் காலதார்னின் படையெடுப்பிற்கு உதவ வேண்டும் எனவும்,அதற்கு அவன் புதியதோர் உலகத்தினுள் சென்று வரவேண்டும் எனவும் தெரிவிக்கிறான்.தன் சொந்தங்களை மீட்பதற்காக மாயஜால உலகிற்குள் அடி எடுத்து வைக்கிறான் தோர்கல்.அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே தோர்கல்:மூன்றாம் உலகத்தினுடைய மீதிக்கதையாகும்.

பெரிதாக சுவாரஷ்யம் ஊட்டும் திருப்பங்களோ,கதை நகர்வுகளோ இதனில் இல்லை.ஆனாலும் வேகமாக கதை பயணிக்கிறது.அதுதான் கதாசிரியரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.ஓவியங்கள் முதல்தரமானவை என்று கூறிவிடமுடியாது.கண்களை உறுத்தாமல்,கதையின் போக்குடன் அமைந்துள்ளன,அவ்வளவே.இளம்பெண் ஷானியாவின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான் இருந்தாலும் அதற்கு கூறப்படும் காரணம் முற்றிலும் ஏற்கக் கூடிய ஒன்றே.போரடிக்காத கதை என்பதனால் தருக்க மீறல்களை கவனத்திற்கொள்ளாது பாஸ் மார்க் போடலாம்.

2 comments:

//]]>