Related posts

Breaking News

தெறி(Theri-A terrific experience)

முதல் நாளினுடைய(நேற்று) இரண்டாம் காட்சிக்காக,நம்மூரில் இருப்பதிலேயே மிகவும் நாகரீமான திரையரங்கம் எனக்கருதப்படும் Cargills திரையரங்கத்திற்கு நண்பர்களுடன் புறப்பட்டேன்.ஆனால் அங்கோ நிலைமையே வேறு,காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்தனர்.அரங்கம் முழுவதுமே அலங்கோலம் பூண்டு இருந்தது.உள்ளே நடந்த களேபரத்தினால் காட்சியை வேறு இரத்து செய்து விட்டார்கள்.இத்தனைக்கும் உள்ளே மூன்று அரங்கங்கள் இருந்தும் ஒன்றில் கூட படம் திரையிடப்படவில்லை.ஆனால் முதலாவது காட்சி பல அடிதடிகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டிருந்தது.அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு பயணித்தவாறே செல்லா திரையரங்கம் பக்கம் எட்டிப்பார்த்தேன்.கண்களின் எல்லைவரை சனத்திரள் குவிந்திருந்தது.சரி,வந்தது வந்து விட்டோம் ராஜாவில் சரி டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்துவிடுவோம் என்ற நப்பாசையில் போய் பார்த்தால் அங்கே நிஜமாக தெறிக்க விட்டு விட்டார்கள்.பாருங்களேன்

முட்டி மோதி டிக்கெட் எடுத்தாலும் நமது ரசிக கண்மனிகளின் ஆரவாரத்தில் ஒன்றுமே விளங்கப் போவதில்லை என்பதால் அமைதியாக வீட்டிற்கே திரும்பிவிட்டேன்.இப்படியாக என் வாழ்வில் முதன்முதலாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் திரும்பி வந்த அந்த சரித்திர சம்பவம் நேற்று இடம்பெற்றது..!
இரண்டாவது நாள்,கூட்டம் சற்றே குறைந்திருக்கும் என்ற கணிப்போடு திரையரங்கிற்கு சென்றேன்.கணிப்பு பொய்த்துப்போனது.சனத்திரள் இருமடங்காகியிருந்தது.சுவாசிக்க காற்று கூட கம்மியாகியிருந்து.வியர்வை துளிகளாக உருவெடுத்து பின்னர் ஊற்றாக மேனி முழுவதும் படர்ந்து விட்டது.மும்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கிய பானங்கள் எதுவும் உஷ்ணத்தை தணிக்கவில்லை.அணிந்திருந்த சட்டை அடையாளம் தெரியாத நிறத்திற்கு மாறியிருந்தது.இவ்வளவு பட்ட பின்னும் படம் பார்க்காமல் சென்றால் மனம் தாங்காது என்பதால் முட்டி மோதி ஒரு வழியாக சீட்டைப் பெற்றுக் கொண்டோம்.உள்ளே சென்றால்,வந்திருந்தவர்களில் பாதிக்கு மேலானவர்கள் நல்லூர் கோயில் தரிசனத்தில் இருப்பது போல் சட்டையணியாமல் உட்கார்ந்திருந்தனர்.எல்லாம் வியர்வை செய்த மாயம்.கதை,பாதிக்கு மேல் என்னை அறிந்தால் திரைப்படத்தின் அதே கதை.மீதி சத்திரியன் மற்றும் இத்யாதிகள்.புதிது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை எனலாம்.ஆரம்ப காட்சியிலேயே தலைக்கவசம் அணியாமல் தன் குழந்தையையும் இருத்திக் கொண்டு அதிகூடிய வேகத்தில் செல்லும் எங்கள் அண்ணா,பாடல் காட்சியில் தலை கவசம் அணியச் சொல்வதையெல்லாம் சகிக்க முடியவில்லை."கவர்மெண்ட் என்றால் என்ன?"என்று கேட்டுவிட்டு ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் சொல்கிறார்.வில்லன் கதாபாத்திரம் பலவீனமாக உள்ளது.பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இசை அனிருத் என்று போட்டு இருந்தால் கூட நம்பியிருப்பேன்."உன்னாலே எந்நாளும்" பாடல் மாத்திரம் ஜீ.வி ரகம்.தனது தனித்தன்மையை இவரும் இழந்து விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.படம் பூராகவுமே ஏற்கனவே இடம் பெற்ற படத்தில் இருந்த காட்சிகள்தாம்.என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனுஷ்கா மற்றும் விவேக் ஆகியோர்களது பாத்திரங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.விவேக்கினது கதாபாத்திரம்(கான்ஸ்டபள்.ராஜேந்திரன்) கூட பரவாயில்லை ஆனால் அனுஷ்காவினது கதாபாத்திரத்தை மருந்திற்கு கூட பயன்படுத்தவில்லை.இறுதியில் நடைபெறும் கதிரைச் சண்டை அவென்ஜர்ஸ்(Marvel Avengers)திரைப்படத்தில் ஆரம்பத்தில் பிளக் விடோ(Black Widow Scarlett Johnson)மோதும் அதே காட்சிதான்.



ஈயடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஒரு கோர்வையாக தரப்பட்டுள்ளது.அது வெற்றியும் பெற்றுள்ளது.ஆனாலும் அவ்வப்போது ரசிகர்களே அலுப்புத் தட்டிப்போகிறார்கள்.இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் நான் படம் பார்த்தது சினிமா மீது இருக்கும் மதிப்பினாலும் தீரா பிரியத்தினாலும்தான்.ரசிகர்களை மேலோட்டமாக நினைத்து கதை எழுதியிருக்கிறார்கள்.நமக்கும் கவனிக்கும் திறன் அதிகம் உள்ளது சாரே..!வேகமான திரைக்கதை,அருமையான ஒளிப்பதிவு,நேர்த்தியான வசனங்கள்,விஜய்யின் திரை ஆளுமை,பின்னணி இசை,அப்பா மகள் உறவு கையாளப்பட்டுள்ள விதம் இவையெல்லாம் படத்தின் மிகப் பெரிய பலங்கள்.விஜய் அருமையாக நடிக்கவும் செய்துள்ளார்,நடனம் வழக்கம் போல பலே.இருந்தாலும் கதை மட்டுமன்றி காட்சிக்கு காட்சி நகலெடுத்துள்ளார்கள்.ராஜா ராணியிலாவது "கீர்த்தனா" என்ற மறக்கவே முடியாத கதாபாத்திரமும் புதிதான சில காட்சிகளையும் அட்லி எழுதியிருந்தார்.ஆனால் இது அனைத்துமே நகல் மயமான படைப்பு..அடுத்த முறையேனும் அட்லி புதிய கதை,கதாபாத்திரங்களுடன் வருவார் என்று நம்புகிறேன்..!















No comments

//]]>