Related posts

Breaking News

ஒரு சப்பை வழக்கு:Mr.J on Mission


எழுத்துலகின் டி20 வர்ஷன்தான் சிறுகதை.சிறுகதைகளுக்கென்று கோட்பாடு ரீதியான வரைவிலக்கணங்கள் இல்லை.ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்களது கண்ணோட்டத்திற்கேற்ப சிறுகதைக்கு வரைவிலக்கணம் சொல்கின்றனர்.ஆனால் சிறுகதை என்ற சொல்லிலேயே அதற்கான வரைவிலக்கணம் உள்ளது.அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.அதுதான் சிறுகதை.தமிழின் முதலாவது சிறுகதை வ.வே.சு.அய்யரின் "குளத்தங்கரை அரசு மரம்" என்பதாக ஞாபகம்.இவரது "மங்கையர்கரசியின் காதல்" என்ற சிறுகதை எங்கள் வகுப்பில் ஒரு பாடமாகவே கற்பிக்கப்பட்டது(ஜாதி வளர்தவர் என்று கூறப்படும் வ.வே.சு அய்யர்,பாரதியாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மிகச்சிலரில் ஒருவர்).ஆனால் என்னை கேட்டால் சிறுகதையின் வாத்தியாராக சுஜாதாவைதான் குறிப்பிடுவேன்.அழகாக பயணிக்கும் சிறுகதையில் கடைசி வாக்கியத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்து முடிப்பதுதான் இவரது ஸ்டைல்.சுஜாதாவைத் தாண்டி புதுமைப்பித்தன்(காலனும் கிழவியும் எனற மாஸ்டர் பீஸ்) மற்றும் இன்னும் சில எழுத்தாளர்களும் மறக்க முடியாத பல சிறுகதைகளை எனக்கு அளித்துள்ளனர்.இவர்களது தூண்டுகோலால் நானும் அவ்வப்போது சில கதைகளை எழுதியதுண்டு.எனினும் கடந்த 2 வருடங்களாக கதை என்ற போர்வையில் நான் எதையுமே முயற்சி செய்து பார்க்கவில்லை,நேரமும் இல்லை அதேநேரம் நான் நல்ல சிறுகதைகளைப் படித்தும் நிறைய நாட்களாகிவிட்டது.இதைப்போன்ற காரணங்களால் கதையெழுதுவது என்பதே எனக்கு கடினமாகிவிட்டது.சரி நாமும் கதையொன்றை எழுதிப்பாரக்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.ஆனால் உருப்படியாக எதுவும் வரவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக வந்த இன்ஸ்டோல்மண்ட் சிந்தனைகளை ஒன்றுதிரட்டி ஒரு கதையை எழுதியுள்ளேன்.அதற்குரிய அட்டைபடத்தையும் நானே வடிவமைத்துவிட்டேன்.கதை எழுதும் போது அதில் பல சிக்கல்கள் எழுந்தன.எழுத எழுத குறுநாவல் கணக்கில் கதை நீ......ண்டு விட்டது.அதனால் பல பந்திகளை வெட்டிவிட்டேன்.இறுதியான வடிவத்தில் சில மாறுதல்களை செய்து பார்த்தபோது உப்பு சப்பில்லாமல் கதை இருந்தது.ஆக அதிகமாகவும் எழுதமுடியாது(கண்டிப்பாக படிக்க மாட்டார்கள்) குறைவாக எழுதினால் கதையின் ஜீவனும் கெட்டுவிடும் என்ற நிலையில் இறுதியாக கொஞ்சமே கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்துள்ளேன்.ஆயினும் என்னைப் பொறுத்தவரை இந்த கதையில் இம்பூருவஸை செய்ய நிறைய விடயங்கள் உள்ளன.ஓகே,பில்டப்புகள் போதும் என்று நினைக்கிறேன்.இனி கதைக்குள் செல்வோம்.அதற்கு முன் அருமையான சிறுகதைகள் பலவற்றை எழுதிய அத்தனை எழுத்தாசன்களிடமும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

Photo credits:maduraivasagan.wordpress.com


ஒரு சப்பை வழக்கு:Mr.J on mission



வழமைபோல் அல்லாமல் கோர்ட் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னரே நான் அங்கு ஆஜராகி விட்டேன்.காரணம்,ஆபிஸ் ரூமில் உட்கார்ந்துக் கொண்டு ஈயோட்டும் என்னிடம் ஒரு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதே(ஆபிஸ் ரூம் என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது,இன்று வாடகைப் பணம் வேறு கொடுக்க வேண்டும்).கேஸ் ஒன்றும் அத்தனை பெரிது அல்ல.அண்ணன்-தம்பிக்கு இடையிலான காணி தகராறுதான் வழக்கின் மொத்தமுமே.ஆனால் நானும் எதிர்தரப்பு வக்கீலும் நீதிமன்றுக்கு போக்கு காட்டியே 2,3 மாதங்களை கடத்தி விட்டோம்.மாவட்ட நீதிமன்றங்களை பொருத்தவரை இது வழக்கமாக ஒரு கேஸுக்கு எடுத்து கொள்ளும் காலப்பகுதிதான்.ஆனால் அன்று என் கட்சிக்காரர்களை பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது."உன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றாதே"என கடவுளும்,"அண்ணன்-தம்பியாக இருந்து கொண்டு விட்டுக்கொடுக்க தெரியாத இவர்களை விடாதே,பிடித்து அமுக்கு"என சாத்தானும் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.கடவுள் வென்றார்.கேஸ் தொடங்கியது,பத்தே நிமிடங்களில் முடிந்தும் போனது.சாட்சியும் நியாயங்களும் எங்கள் பக்கம் இருந்ததால் நான் பெரிய சிரமமின்றி ஜெயித்து விட்டேன்(எதிர்தரப்பு வக்கீல் எவ்வளவு பெரிய டுபாக்கூர் என பார்த்துக் கொள்ளுங்கள்).வழக்கில் வெற்றி பெற்றதால் என் கட்சியினர் முகமலர்சியுடன் எனக்கு செலுத்த வேண்டிய மீதிப்பணத்தை அளித்தனர்
(வீட்டில் செல்வத்திற்கு குறை இல்லை என்றாலும் என் சம்பாத்தியத்தைதான் நான் பெரிதும் நம்பியிருக்கிறேன்).அந்த பணத்தையும் கையில் இருந்த காசையும் கொண்டு ஆஃபிஸ் ரூம் வாடகையை செலுத்திவிட்டேன்.ஆக மொத்தம் இந்தமாதம் என் கையில் இருந்த ஒரே ஒரு கேஸும் முடிந்து விட்டது.இப்போதைக்கு கையில் கேஸும் இல்லை,கேஷும் இல்லை.போனால் போகட்டும் போடா என மனதை தேத்திக்கொண்டே கேன்டீன் பக்கம் நடையைகட்டினேன்.ஆயிரமாயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நமக்கு சோறுதானே முக்கியம்.

வக்கீல் தொழிலுக்கு வந்ததற்கு பதிலாக வேறேதும் உருப்படியான உத்தியோகமொன்றை பார்த்து இருக்கலாம் போல.இன்று காலையில் கூட அம்மாதான் கைச்செலவுக்கு பணம் கொடுத்தார்.இந்த கோர்ட் வளாகத்தை பொறுத்த வரை என் அம்மாவுக்கு இருக்கும் புகழில் கால் பங்கு கூட எனக்கு இல்லை எனலாம்.என் அம்மா இங்குதான் வேலை பார்த்தார்.ஆபிஸ் பியூனாக அல்ல.நீதவானாக.அவர் ஒரு முன்னால் நீதவான்.அவரைக்கண்டாலே அன்று கேஸுக்கு வந்த குற்றவாளி முதல் லாயர் வரை அனைவருக்கும் உடம்பு சில்லிடும்.கண்களை பார்த்தே குற்றவாளி யார்,சுற்றவாளி யார் என கண்டுபிடித்துவிடுவார்.பெரும்பாலும் அவரது ஊகங்கள் சரியாகவே இருக்கும்.இயல்பிலேயே சட்டம் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.இங்குள்ள அனைவருக்கும் அவர்மீது மரியாதை உண்டு.என்னையும் சேர்த்துதான்.ஆனால் என்னை அவரின் மகனாகத்தான் இங்குள்ளவர்களுக்கு தெரியும்.வக்கீல் ஜீவானந்தம் என்றால் இங்கே பலருக்கும் தெரியாது.ஏன் உங்களுக்கு கூட தெரியாது.அது நான்தான்."நம்மையும் நாலுபேர்க்கு தெரியனும்னா,பெருசா எதுனா பண்ணனும்" என சைதாபேட்டை சாமியார் அடிக்கடி கூற கேட்டதுண்டு.இன்று கேஸில் வேறு ஜெயித்து விட்டதால் இன்னும் பெரிதாக ஏதாவது பண்ணவேண்டும் என அவர் அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார்.இருந்தாலும் அவரது உபதேசங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க தொடங்கினேன்.அப்போதுதான்,திடீரென அந்த குரல் ஒலிக்க தொடங்கியது.
"பெருசா எதுனா செய்யணும்".

"என்னடா இது வம்பா போச்சு,ஏன் சாமி இன்னைக்கு ரொம்ப தொந்தரவு பண்றீங்க"

"டேய் மனுஷனா பொறந்தா ஏதாச்சும் உருப்படியா செய்யனும்டா"

"நான் குழந்தையாதான் சாமி பொறந்தேன்"

"அடேய்,வாட்ஸ் ஆப்பில் வரும் மொக்கை ஜோக்குகளை என்கிட்ட சொல்லாதே.வெட்டியாதானே இருக்க,கஷ்டமான கேஸு எதயாச்சும் எடுத்து படிக்கலாம்ல"

"நான் வெட்டினு யார் சொன்னா,இப்ப கூட ஆராதனாவோட போஸ்டுக்கு லைக் பண்ணிட்டுதான் இருக்கேன்"

"உன்னை எல்லாம் திருத்த முடியாது,உங்கப்பா இந்த வயசுல ஒரு கார் கம்பனில இஞ்சினியர்.அவரு தனியாவே ஒரு காருக்கு மாடல் செய்வாரு.நீ என்ன செய்வ?"

"நான் தனியாவே ஒரு கார ஓட்டுவேன்"

"அகராதி புடிச்ச பயதான்.உன் திறமைய கோர்ட்ல காட்டு"

"அதான் ஐயா இன்னிக்கு ஜெயிச்சுட்டேன்ல"

"ரொம்ப பண்ணாதடா,அவனவன் ஒரு நாளைக்கு 20,25 கேஸ்ல எல்லாம் அபீயர் ஆறான்.ஏன் உங்க அம்மா லாயரா இருக்கும் போது கூட ஒரே வாரத்துல 12 கேஸ்ல ஜெயிச்சு இருகாங்க".

"இப்ப என்னதான் பண்ணுங்குற"

"உங்க அம்மா மாதிரி லாயரு இருந்து ஜட்ஜ் ஆக வேணாம்,அட்லீஸ்ட் ஒரு நல்ல லாயர்னு சரி பேரேடுக்கலாம்ல"

"அதுக்கு நான் என்ன பண்ண.திறமைய காட்டுற மாதிரி ஒரு கிரிமினல் கேஸுமே என்கிட்டே வரமாட்டேங்குதே"

"கேஸ் தானா வரதுடா,நீயாதான் தேடி போகணும்,உன் கேஸ்.உன் உரிமை"

"நீங்க மட்டும் மொக்க காமடியா பண்ணுங்க.அப்புறம் சாமி இந்த ஆராதனாவ மடக்க......சாமி சாமி"

கதைத்துக்கொண்டிருக்கும் போதே போய்விட்டாரே.அடிக்கடி என் மனதில் தோன்றி என்னை குழப்புவதுதான் இவரது வேலையே.இருப்பினும்அவர் கூறிய சிந்தனைகள்(!??) வேறு மனதை வாட்டின.நானாகவே வழக்கை தேடிப்போக வேண்டுமாம்..அதனால் சமீபத்தில் வந்து தீர்க்கப்படாமல் கிடப்பில் இருக்கும் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என விசாரிப்பதற்காக நமது கோர்ட்டின் பிரபலமான வக்கீல் ஒருவரைப் பாரக்க அவரது அறைக்கு சென்றேன்.ஆள் படுபிஸியாகத்தான் இருந்தார் அல்லது என் கண்ணுக்கு அவர் பிஸியாக இருப்பதாகப்பட்டது.ஆகையால் வெளியே சென்று சக வக்கீல்களிடம் பேச்சு கொடுத்தேன்.சில வழக்குகளை பற்றி கூறினார்கள்.ஆனால் அவை அனைத்துமே பழைய கேஸ்களாக இருந்தன.கேஸ்களை பற்றி கதைத்து கொண்டிருந்தவர்கள் வேறு தலைப்பிற்கு மாறிவிட்டார்கள்.நானும் நைஸாக கம்பிநீட்டிவிட்டு மீண்டும் அந்த லாயரின் அறைக்கே திரும்பினேன்.அவரிடம் மெல்ல கதைக்க தொடங்கினேன்.

"ம்ஹும்"

மெதுவாக தலையை திருப்பி பார்த்தார்"ஹே,ஜீவா" என்றார் நிதானமாக

"சொரி,ஐம்,கே.ஜீவா"

"சீ...சரி என்ன விஷயம்?"என்றார்.
அவரே நேரடியாக விடயத்திற்கு வந்துவிட்டதால் நானும் வழக்கமான விசாரிப்புகளை புறக்கணித்து விட்லாம் எனறுதான் நினைத்தேன்

"புதுசா கேஸ் ஏதும்......அப்புறம் எப்படி இருக்கீங்க"என்றேன்.
என்னை ஏதோ தடுத்தது.

"நல்லா இருக்கேன்.ஆமா,நீ ஏன் தடுமாறுற...?"

"ஒண்ணும் இல்ல.ஃப்ரீயா இருந்தேன்.அதான் சும்மா அப்படியே"

"பட்,நான் இப்ப பிஸி"

"ஓ,மன்னிசுக்குங்க"என்று கூறிவிட்டு சட்டென திரும்பினேன்".

"அம்மாவ கேட்டதா சொல்லுங்க"

"சரி"என்றேன்,திரும்பி பார்க்கவில்லை.

கதவில் கை சிக்கியது போல் இருந்தது எனக்கு.சக லாயர் என்ற மரியாதை கூட இல்லை.இவருக்கெல்லாம் ச்சீ இவளுக்கெல்லாம் என்ன மரியாதை.நாம் பேசாமல் ரூமுக்கே போய் ஒரு தூக்கத்தை போடுவோம் என்று கிளம்பிவிட்டேன்.

அடுத்த நாள் காலை,நான் கோர்ட்டுக்கு லேட்டாகதான் புறப்பட்டேன்.எனக்கென்று ஒரு கேஸ்கூட இல்லையென்பது ஒரு காரணம்.எனது கார் டயரில் காற்று போதவில்லை என்பது இன்னொரு காரணம்.ஆகையால் காரையும் கிளப்பிக்கொண்டு பக்கத்தில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன்.

"ஏம்பா,டயர்ல காத்து பத்தல...ஒருகா பார்த்து அடிச்சு விடு"

"என்ன நம்பர் சார்?,வழக்கம்போல 36தானா?"

"ஆமா,36 போதும்"

காற்றை லெவல் செய்து விட்டான்.ஒரு 20 ரூபா நோட்டை கையில் திணித்தேன்.

"சார்"என்றான் ஹீனமாக.

இன்னுமொரு இருபது ரூபாயை கையில் திணித்தேன்.

"சார்"என்று இழுத்தான் மீண்டும்.

"என்ன" என்றேன்.

"இல்ல சார்,ஐயா பாவிச்ச கார்,அப்ப காருக்குள்ள மல்லிபூ எல்லாம் வச்சி கமகமனு இருக்கும்.இப்ப லைட்டா காருக்குள்ள கப்படிக்குது"என்றான்.

"அது ஒண்ணுமில்லபா,காரை வெளில எடுத்து மிச்சநாள்,அதான் அப்படி மணக்குது.அந்திக்கு வீட்டுக்கு போய்தான் வொஷ் பண்ணணும்"

"அதுவரைக்கும் இந்த வாசத்தோடயா போக போறீங்க?நில்லுங்க சார்"என்று சொல்லிவிட்டு கடைக்குள் ஓடினான்.அடுத்த நிமிடம் கையில் ஒரு எயார் ஃப்ரெஷ்னரைக் கொண்டு வந்து காருக்குள் ரேடியோவுக்கு மேலே ஏசி காற்று வரும் இடத்தில் பொருத்தினான்.

"இப்ப ஏசிய போட்டுட்டு போங்க சாரே.சும்மா மல்லிகை பூவாசம் எப்படி மணக்கும் பாருங்க"என்றான்.

அதற்கு வேறு மேலதிகமாக நூறு ரூபாயை அழுதுவிட்டு கோர்ட்டுக்கு விரைந்தேன்.

நான் அறைக்குள் வந்த அரைமணிநேரத்துக்குள் ஆபிஸ் பையன் ஒரு ஃபைலை மேசைமீது வைத்துவிட்டு சென்றான்.கூடவே ஒரு குறிப்பையும்."கோப்பு சேதமடைந்தாலோ,காணாமல் போனாலோ நீங்கள்தான் அதற்கு முழுப்பொறுப்பு-ஜெ.ஆராதனா" என்று அதில் எழுத்தப்பட்டிருந்தது.இவள் ஏன் எனக்கு இந்த ஃபைலை அனுப்பவேண்டும்.ஃப்ரீ வைபை புண்ணியத்தில் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்த நான் அதை மூடி விட்டு ஃபைலை திறந்தேன்.கோப்பில் இருந்தவற்றின் சாரம்சம் இதுதான்.

திரு.நடேசபிள்ளை என்பவர் மாஜி மந்திரியாம்.தன் இரண்டு மகன்களுக்கும் தமோதரப்பிள்ளை,கிருஷ்ணபிள்ளை என்று தனது முன்னோர்களது பெயர்களை சூட்டி அழகு பார்த்து இருக்கிறார்.பேரை மட்டும் வைக்கவில்லை இவர்களுக்கு வேளாவேளைக்கு சோறும் வைத்து நல்ல படிப்பும் புகட்டி சிறப்பாகவே வளர்த்திருக்கிறார்.2 வாரங்களுக்கு முன்பு வரை நடேசனின் மூத்தமகன் தமோதரப்பிள்ளை காணமல் போகும் வரை இவருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.ஆனால் தன் மகன் காணமல் போக ரொம்பவும் துவண்டு விட்டார் போலும்.அதுமட்டுமில்லாமல் இரண்டு நாட்களுக்கு முன் நடேசன் எனப்படும் திரு.நடேசபிள்ளை அவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பிரதே பரிசோதனை அறிக்கையின்படி இவர் ஸ்லோ பொய்சனிங் எனப்படும் முறையில் அணுஅணுவாகவே சாவடிக்கப்பட்டிருகிறார்.விஷத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இவரது நுரையீரல்தானாம்.இன்னுமொரு முக்கியமான விடயம்,விஷம் உணவு மூலமாகவோ திரவங்கள் மூலமாகவோ ஏற்றப்படவில்லை.அதேநேரம் உடலின் வெளிப்புறத்திலும் காயங்கள் ஏதேனும் இருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.குடும்பத்தினர் அல்லது தொழில் எதிரிகள் யாராவதுதான் இதை செய்திருக்க வேண்டும் என்பதுதான் மன்றின் கருத்து.

இவைதான் என்கண்களுக்கு சாரம்சங்களாக தென்பட்ட விடயங்கள்.மேலும் அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என இன்னொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.கடந்த 20 நாட்களாகத்தான் இவரது உடலில் விஷம் அதிகரித்துள்ளதாம்.அதுமட்டுமல்லாமல் நடேசனின் மகனான திரு.கிருஷ்ணப்பிள்ளை தனது அப்பாவின் தொழில் முறை எதிரிகளான திரு.சங்கர் மற்றும் திரு.திலகர் என்பவர் கள் மீதான தனது சந்தேகத்தை மன்றிற்கு முன்வைத்துள்ளார்.எனினும் அடுத்து ஹியரிங்கிலேயே திலகர் மீதான தனது கருத்தை வோபஸ் வாங்கியுள்ளார்.இது எனக்கு கொஞ்சம் நெருடலாகப்பட்டது.அடுத்ததாக நான் ஒன்றை யோசித்தேன்.ஒருவர் விஷம் வைத்து கொல்லப்படுள்ளார் என்றால் எப்படியெல்லாம் அதை செய்யலாம் அதுவும் உணவிலும் பானங்களிலும் அல்லாமல் வேறொரு முறையில் இவருக்கு விஷத்தை செலுத்தியுள்ளனர்.யோசிக்கவே லேசாக மண்டை குழம்பியது.இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள திரு.நடேசபிள்ளையின் வீட்டில் சென்று தான் விசாரிக்கவேண்டும்.பல்வேறு யோசனைகள் மண்டையை திருகிக் கொண்டிருந்தபோதுதான் என் கைப்பேசி பாட்டுபாடத் தொடங்கியது.எடுத்து ஆன்சர் செய்தேன்.

"ஹலோ...ஜீவா,ஐம் ஆராதனா"

"பிஸி ஆராதனா,சொல்லுங்க என்ன விஷயம்?"

"சோ சொரி ஜீவா,நேத்து கொஞ்சம் வேலையா இருந்தேன்.அதான் உங்ககூட கதைக்க முடியல.அப்பறம் எனக்கொரு சின்ன ஹெல்ப் வேணும்"

"ஹெல்பா...உங்களுக்கு நானா...ஜோக் ஒஃப் த டே"

"அப்படியில்ல,நான் கொடுத்த கேஸ நீங்க ரீட் பண்ணியிருப்பீங்கனு நினைக்கிறேன்.நிலைமை உங்களுக்கே புரியும்.அடுத்த ஹியரிங் டேட் வேற இந்த வீக் வருது.பட் கேஸ்ல எந்த இம்புருமண்டும் இல்ல.அதான் உங்க அம்மாகிட்ட நேத்து இத பத்தி டிஸ்கஸ் பண்ணேன்.வேணும்னா ஜீவா கிட்ட கேட்டு பாரு அவன் கண்டிப்பா ஏதாவது ஹெல்ப் பண்ணுவான்னு சொன்னாங்க"என்றாள்.

"யா பார்த்தேன்,அம்மாவே சொல்லிட்டாங்களா?தென் ஓகே,ஐ வில்"என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

ஆராதனா,ஆரதனா சோமசுந்தரம்(அப்பா பெயர் பொருந்தவேயில்லை).தூரத்து உறவுக்கார பெண்.ஆம்,அழகானவள்தான்.உங்களுக்கு இவளைத்தெரியும்.நேற்று என்னை வெறுப்பேற்றிய அந்த பிரபலமான லாயர் இவள்தான்.இருவரும் ஒரே கல்லூரியில்தான் படித்தோம்.ஒன்றாகத்தான் பட்டம் வாங்கினோம்.ஆனால் எப்படியோ அவள் என்னை முந்திக்கொண்டாள்.அவள் மேல் லேசான பொறமை இருப்பது என்னவோ உண்மைதான்.ஆனால் அவளைப் பார்க்கும் போது வாரத்தைகளில் விபரிக்க முடியாத சில உணர்வுகள் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.அவளை பற்றி கூறியது போதும் என்று நினைக்கிறேன்.நாம் கேஸைப் பற்றி பார்ப்போம்.

நடேசப்பிள்ளையின் வீடு,நகர்புறத்தில் இவ்வளவு பெரிய வீட்டை சமீபத்தில் நான் எங்குமே கண்டதேயில்லை.கெரேஜ் போன்று கட்டப்பட்டிருந்த இடத்திலு ஒரு வாகனம் மூடி வைக்கப்பட்டிருந்தது.அதன்மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக காரின் அருகிலேயே சென்று பார்த்தேன்.காரின் மேல் இருந்த சீலையை அகற்றினேன்.அருமையான நடுத்தர காலத்துக் கார் அது.பெருமூச்சு விட்டுக்கொண்டே நடேசனின் வீட்டு பக்கம் திரும்பினேன்.வீட்டைச் சுற்றி காவலுக்கென யாரும் இருக்கவில்லை சொல்லப்போனால் ஒரு நாய்கூட இல்லை(இருந்த ஒரு காவலாளியும் நான் வந்ததுகூட தெரியாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறான்).யாரும் கவனிக்காத காரணத்தால் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கும் சென்று பார்த்தேன்.பின்னர் வாசல் பக்கத்திற்கு வந்த போது ஒரு மாறுதலை என்னால் கவனிக்க முடிந்தது.அறிக்கையில் நடேசனின் வீடென குறிப்பிடப்பட்டிருந்து,இப்போது அது திரு.கிருஷ்ணபிள்ளையின் வீடாக மாறியிருந்ததை முகப்பில் இருந்த போர்ட்டு தெளிவாக சொல்லியது.ஆக நடேசன் கொல்லப்படுவது கிருஷ்ணணுக்கு இலாபமே.

சன்னமாக காலிங்பெல்லை அழுத்தினேன்.ஒரு பெண்மணி வந்து கதவை திறந்தார்.அநேகமாக அவர் நடேசனின் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.

"யார் நீங்க?"

"கிருஷ்ணன் இருக்காரா"

"அவரு வெளில போய்ட்டாரே,யார் நீங்க?"

"நான் ஜீவா.அவரோட ஃப்ரண்டுதான்.சும்மா அவர பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்" என்றேன்.

"சரி உள்ளவாங்க"

உள்ளே சென்றேன்.வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் வீடு பிரமாண்டமாகதான் இருந்தது.ஹால் பார்ப்பதற்கு மெயின்ரோடு போல இருந்தது.சுவரோரத்தில் நடேசனின் படம் தொங்கிக்கொண்டிருந்தது.அருகிலேயே அவரது குடும்பப் படமும்.அதில் கிருஷ்ணனையும் நடேசனையும் ஒத்த முகத்தை கொண்ட இன்னொருவரும் இருந்தார்.ஃபைலில் குறிப்பிடப்பட்டிருந்த காணாமல் போன நடேசனின் மகன் தமோதரப்பிள்ளை அவனாகதான் இருக்கக்கூடும் என்பதை இலகுவாக அறிந்து கொண்டேன்.(ஏற்கனவே கிருஷ்ணனின் ஃபேஸ்புக் அக்கவுண்டை முழுவதுமாக துருவிவிட்டதால் கிருஷ்ணனை இலகுவாக என்னால் அடையாளம் காண முடிந்தது).கூடவே அவர்களுக்கருகில் ஒரு லெப்ரடார் இன நாயும் அமர்ந்து இருந்தது.

"தம்பி டீயா,காப்பியா?"

"பால்" என்றேன்.

ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு அவர் உள்ளே சென்றார்.திரும்பி வரும்போது நான் இல்லாததைக் கண்டு அவர் நிச்சயமாக வியப்படைந்து இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை தேவையான தடயங்களை திரட்டியாகிவிட்டது.குற்றவாளியையும் கிட்டதட்ட கண்டுபிடித்து விட்டேன்.இதற்குமேல் அங்கிருப்பதில் பிரயோஜனம் இல்லை.அம்மாவிடமும் ஆராதானாவிடம் இதைப்பற்றி கூறினாள் ஆச்சிரியப்படுவார்கள்.

"அடேய் மடையா"

"சாமி"

"பின்ன என்ன மாமியா...ஏண்டா கேஸ் படிக்கிற உனக்கு ஒரு பொண்ணோட மனச படிக்க தெரியலையே,ஆராதனா இன்னைக்கு உனக்கு லவ் லெட்டர் கொடுத்தாளே.அது கூடவா நீ இன்னும் படிக்கல?"

"என்ன சாமி சொல்றீங்க?,சாமி...சாமி"

என்னடா இது?சாமி இப்படியெல்லாம் குழப்புகிறாரே.நாம் இப்போதைக்கு வழக்கை பற்றி மட்டும் யோசிப்போம் என மனதை மாற்றிக்கொண்டேன்.ஆனால் எனக்கும் அவளோடு கதைக்க வேண்டும்போல்தான் இருந்தது.அவள் எண்களுக்கு டயல் செய்தேன்.3வது ரிங்கிலேயே அட்டண்ட் செய்தாள்.

"ஹலோ"

"ஹலோ...நா...நான்தான் ஜீவா"

"யா...சே"

"உங்க கூட கொஞ்சம் கதைக்கனும்,ஒரு அரைமணித்தியாலம் அப்பொயின்மண்ட் கிடைக்குமா?"

"வெல்,இன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி"

"அப்ப பரவாயில்வ...கேஸ் பத்தி கதைக்கதான் டைம் கேட்டேன்"

"ஓ...தென் கம் டு மை ஆபிஸ்"

"ஆபிஸா...காபி குடிச்சுக்கிட்டே கதைக்கலாமே,எங்கேயும் வெளில"என்றேன்

"காபி இங்கேயே கிடைக்கும்"என்றாள்.

"சரி,வாரேன்"என்று சொல்லவிட்டு வேண்டா வெறுப்பாக ஃபோனை வைத்தேன்.

"அந்த சாலையோரம்,ஒரு மாலைநேரம்,மங்கும் ஒளியும் நீனே"என மனதில் ஆதி தாளம் போட்டுக்கொண்டிருந்தார்.ஆனால் அவளோ ஒரு கண்ணாடியையும் அணிந்து கொண்டு(புது பழக்கம்)ஏதோ ஒரு ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தாள்(கேட்டதற்கு நாளைக்கு ஆஜாராக வேண்டிய கேஸ் பற்றிய ஃபைல் என்றாள்).

"தூரப்பார்வையா"என்றேன்

"பார்டன்"

"உங்க ஐ கண்டக்ட் தூரப்பார்வையானு கேட்டேன்"

"ஆமா,இத கேக்கதான் வந்தீங்களா?"

"இல்ல,சும்மாதான் கேட்டேன்,காலையில கோர்ட்ஸ்ல கூட போட்டு இருந்தீங்களே?"

"எக்ஸாக்ட்லி,சோ வட்?"

"ஐ திங்க யு ஆர் லையிங்,உங்க ஸ்பெக்ஸ்ல லென்ஸே இல்ல...ஏம் ஐ க்ரெக்ட்?"

"யா......ட்ரு இஸ்,நான் சும்மா ஸ்டைலுக்குதான் கண்ணாடி போடுறேன்,பட் அது எப்படி உங்களுக்கு தெரியும்?"

"கோஸ்,உங்க கண்ண என்னால பெர்வெக்டா பார்க்க முடியுது.அது மட்டுமில்லமா தூர்ப்பார்வை இருக்குறவங்க வேகமாக வாசிக்கும்போது கண்ணாடிய கழட்டி வச்சிட்டுத்தான் வாசிப்பாங்க,நீங்க கவனிச்சதில்ல போல,அப்பறம் அன்னைக்கு ஒருநாள் நான் கிட்டப்பார்வையானு கேட்டேன்.அதுக்கும் நீங்க ஆமான்னுதான் சொன்னீங்க"

"அட கிவ் எண்ட் டேக் பாலிஸி ட்ரிக்கா,பரவால்லையே...வேற என்னலாம் தெரியும்?"

"லிப்ஸ்டிக் மின்னுது,கொஞ்ச நேரத்துக்கு மொத தான் போட்டு இருக்கீங்க,முகத்தோட ஒரு பக்கம் பவுடர் அதிகமா இருக்குது,நீங்க போட்டிருக்க கண்ணாடியோட ஃப்ரேம் கிட்டதட்ட எங்க அம்மாவோடது மாதிரியே இருக்குது,அப்பறம் நாளைக்கு கேஸ்னு சொல்லிட்டு ஏதோ பழைய ஃபைல வச்சிகிட்டு படிக்கிறமாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்கீங்க,நான் வாரேன்னு சொன்னதும் ஆஃபிஸ் பையன் கிட்ட சொல்லி அவசர அவசரமா ரூம கூட்ட சொல்லி இருக்கீங்க,அவன் மேசைக்கு கீழ ஒழுங்கா கூட்டல,அப்பறம் அந்த ஸ்பேரே.ரூமுக்கு ஒரு ஸ்பேரே அடிச்சு இருக்கீங்க,உங்க பொடிக்குனு ஒரு ஸ்பேரே அடிச்சு இருக்கீங்க அண்ட் மோஸ்ட் இம்பார்ட்டண்ட் திங் இஸ் ரெண்டு ஸ்பிரே வாசமும் குடல புடுங்குது"என்றேன் வேகமாக.

சற்றே திகைத்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.இதிலிருந்தே அவள் பிபிசியில் ஷெர்லாக் ஹோம்ல் சீரிஸ் பார்ப்பதில்லை என்று தெரிகிறது.

"திஸ் இஸ் இர்ரெட்டிகுலஸ்.அப்படிலாம் இல்ல.வழக்கமாக யார் வந்தாலும் நான் இதையெல்லாம் செய்வேன்."


"சரி இதபத்தி பிறகு டிஸ்கஸ் பண்ணுவோம்,இப்ப இந்த மர்டர் கேஸ  பத்தி பார்ப்போம்"

"ஓகே...சரி சொல்லுங்க...நீங்க ஏதும் கண்டுபிடிச்சீங்களா.என்னோட கணக்கு படி ஓடிப்போன தமோதரன்தான் அவங்கப்பாவ ஏதோ செஞ்சிருக்கான்"

"அது உங்க கண்ணோட்டம்,பட் என்னோடது கொஞ்சம் வித்தியாசம்"

"ஆஹான்,அப்ப உங்க கண்ணோட்டத்தின் படி அதாவது கொலைய யாரு,எப்படி பண்ணியிருப்பான்னு நினைக்குறீங்க?"

"ஆரம்பதுல எனக்கும் ஒன்னுமே புரியல.பட் உங்க ரூம்குள்ள வந்ததும் ஒரு வாசம் வந்துச்சுனு சொன்னேன்ல,அதுதான் இந்த கேள்விக்களுக்கெல்லாம் பதில் சொல்லிச்சு.அந்த வாசம் அதாவது ஒரு வாசம்தான் அவன கொன்னு இருக்கு".

"வாட்,புரியல?"

"புரியிற மாதிரி சொல்றேன்.போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்ட படிச்சீங்களா,அதுல மத்த எந்த உறுப்பையும் விட நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கதா போட்டிருக்கே,டிட் யு சீ தட்?"

"ஆமா,ஆனா அதுல என்ன இருக்கு"

"நுரையீரல்,நாம உள்ள இழுக்குற காத்து முதல்ல அங்கதான் போகுது.அப்படினா காத்துலதான் அவங்க விஷத்த கலந்து இருகாங்க".

"இல்ல,எனக்கு இன்னும் நீங்க சொல்ல வாரது சரியா புடிபடல"

"புரியிற மாதிரி சொல்றேன்.இப்ப நீங்களும் நானும் நடேசனோட வீட்ல இருக்கதா வச்சிக்குவோம்.ஜஸ்ட் ஒரு இமாஜினேஷன்தான்"

"கூல்,கோ ஹெட்"

"முதல்ல என்ன தெரியுது?"

"அந்த கார்"

"அவரோட காருக்குள்ள கொஞ்சம் எட்டி பாருங்க,அதுல வாசத்துக்காக எயார் ஃப்ரெஷ்னர் மெஷின் ஃபிட் பண்ணிட்டு ரிமூவ் பண்ணும்போது ஏற்பட்ட சிராய்புகள் தெரியுதா(காலையில் சர்வீஸ் செய்யும் பையன் கூட இதே போன்ற ஒன்றைதான் எனக்களித்தான்).அதுலதான் பொய்சன கலந்து இருகாங்க.அவரு ஏசி காத்த உள்ள இழுக்கும் போது கூடவே அந்த பொய்சனும் உள்ள போயிருக்கு.சரி,இப்ப அப்படியே அவரோட வீட்டுக்குள்ள போங்க,என்ன தெரியுது?"

"ஃபேமிலி ஃபோடோ"

"யா,பட் அதுல ஸ்பெஷலா என்ன தெரியுது?"

"அதுல ஸ்பெஷலா சொல்லனும்னா காணாம போன தாமோதரனும் கூடவே ஒரு நாயும் இருக்கு"

"அந்த நாய் மேல ஒரு கண்ண வச்சிகுங்க"

"ம்,நோட்டட்"

"நடேசனோட மனைவி உங்களுக்கு தெரியுறாங்களா?நீங்க உண்மைக்குமே அங்க போனப்ப அவளோட கதைச்சு இருப்பீங்க இல்லையா,அப்ப அவ என்னல்லாம் சொன்னா?"

திருமதி.நடேசன் கூறியவற்றை அவள் கூறினாள்.அதில் முக்கியமான விடயமொன்றை மீண்டும் அவளுக்கு ஞாபகப்படுத்தினேன்.

"'அவர் கார அவரேதான் ஓட்டுவாரு.வேற யாரும் அந்த கார யூஸ் பண்ண மாட்டாங்க'னு மிஸஸ்.நடேசன் சொன்னது ஞாபகம் இருக்கா.இதுநாலதான் அந்த மெஷின்ல இருந்து வந்த பொய்சன் அவர மட்டும் அட்டாக் பண்ணியிருக்கு"

"அக்ஸெப்டபள் தோட்"

"இப்ப அப்படியே தோட்டத்து பக்கம் வாங்க,இங்கே நோட்டிஸபளா என்னல்லாம் தெரியுது?"

"ஹா......சாண்ட் அண்ட ட்ரீஸ்,அப்புறம் கொஞ்சம் புல்லும் வளர்ந்திருக்கு"

"அதுல ஒரு இடத்துல மட்டும் அதிகமா புல்லு வளர்ந்து இருக்கு பாருங்க,அப்பறம் லேண்ட் கூட கொஞ்சம் மேடு பள்ளமா இருக்குது இல்லையா?இதுக்கும் போட்டோல இருந்த அந்த நாய்க்கும் லிங்க் இருக்கு"

"ஐ கொட் இட்.அந்த நாய கொன்னு இந்த இடத்துல புதைச்சிட்டாங்க இல்லையா"

"இல்ல,தமோதரன கொன்னு அதுல புதைச்சிருக்காங்க.அதுனாலதான் தரை மேடு பள்ளமா இருக்கு.அந்த இடத்துல அவரோட உடல் உக்கி போன நால புல்லும் அதிகமா வளர்ந்திருக்கு."

"அப்ப அந்த டோக்?"

சொல்றேன்.அவர் வீட்டுல காவலுக்குனு யாருமே இருக்கல.பொதுவா இத மாதிரி பெரிய இடங்கள்ல குறைஞ்சபட்ச பாதுகாப்புகாக ஒரு நாய் சரி வளர்பாங்க.அது மட்டுமில்லாம ஃபோட்டோல இருந்த நாயையும் வீட்டுல பாரக்க முடியல.பொதுவா நாய்களுக்கு மோப்பசக்தி அதிகம்,அத விட்டா தமோதரனோட உடல கிண்டி எடுத்துரும்.சோ,அந்த டோக்கையும் வானிஷ் ஆக்கிட்டாங்க".

"இம்பாசிபள்,நீங்க சொல்றதுலாம் கேக்க நல்லா இருக்கு,ஆனா நெஜத்துல"

"அதனாலதான் நான் இங்க வாரத்துக்கு முதல்லயே போலிஸுக்கு இத பத்தி இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.அவங்க இந்நேரம் தோண்டுற வேலைய ஆரம்பிச்சு இருப்பாங்க"

"சரி,அப்ப இந்த கொலைய யாரு பண்ணியிருப்பாங்க?"

"இன்னுமா கண்டுபிடிக்கல...சிம்பிள்,இத கிருஷ்ணப்பிள்ளைதான் பண்ணியிருக்கணும்.அவன் ஃபேஸ்புக்க பார்த்தேன்.அப்பா செத்து கிடக்காரு.அவன் பாரட்டிக்கு போய் ஃபோடா எல்லாம் எடுத்து போட்டு இருக்கான்.பட் அப்பா இறந்தத பத்தி ஃபீல் பண்ணதாவே அவன் முகத்துல தெரியல.அதுமட்டுமில்லாம அவங்கப்பாவ போட்டு தள்ளிட்டு பழிய அவனோட அண்ணா மேல போட்டுட்டு மொத்த சொத்தையும் லவட்ட பாத்திருக்கான்."என்றவாறு அருகில் ஆபிஸ் பையன் எப்போதோ கொண்டு வந்து வைத்துவிட்டு போன காபியை எடுத்து அருந்தினேன்(ஆறிப்போய் இருந்தது...உவ்வே).

"நீங்க ஏதோ கத விடுற மாதிரி இருக்குது.பட் இப்ப நீங்க சொன்னதுலாம் உண்மையா இருந்துசுனா...இந்த கேஸ் ஓல்மோஸ்ட் சோல்வ் ஆன மாதிரிதான்".என்று கூறிவிட்டு மெதுவாகப் புன்னகைத்தாள்.

"எனக்கு நல்ல ஃகாபி குடிக்கனும் போல இருக்கு"என கூறி விட்டு நான் வெளியேவந்தேன்.

'சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தமோதரன் எனப்படும் திரு.தமோதரப்பிள்ளை என்பவரது உடலை கைப்பற்றியதாக........'

இரண்டு நாட்களாக இந்த செய்திதான் டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டை நிர்ணயித்தது.அதற்கடுத்தடுத்த நாட்களில்தான் நான்,திரு.சங்கரின் சார்பாக ஆராதனா ஆஜராகியிருந்தாள் என்பதை அறிந்து கொண்டேன்.என் உதவியால் அவள் இலகுவாக வெற்றிப்பெற்றிருந்தாள்.இன்று மாலை அவளுடைய கேபினுக்கு வரச்சொல்லியிருக்கிறாள்.அவளைப் பார்க்கதான் சென்றுக்கொண்டிருக்கிறேன்.

"வாங்க ஜீவா,ப்ளீஸ் பீ சீட்டட்,உங்க நாளதான் இந்த கேஸ ஈஸியா ஃபினிஷ் பண்ண முடிஞ்சது,விசாரணைல கிருஷ்ணன்தான் அவங்க அண்ணாவ கொன்னதா அவனே ஒத்துக்கிட்டான்.இது அவனோட அப்பாவுக்கு தெரியவர அவரையும் க்ளவரா கொன்னுருக்கான்னு கண்டுபிடிச்சு இருக்காங்க...ஆ...அப்பறம் இன்னொன்னு சொல்லணும்".

"சொல்லுங்க"

"ரொம்ப தாங்க்ஸ்".

"இட்ஸ் ஓகே.அம்மா சொன்னாங்க,அத நான் செஞ்சேன்,தட்ஸ் ஆல்"

"பட் தாங்ஸ் மட்டும் போதாதுனு நெனைக்குறேன்.இந்தாங்க உங்களோட ஷேர்"என்று கையில் ஒரு கவரை கொடுத்தாள்.கூடவே அன்றைய நாளிதழையும் என்னிடம் நீட்டினாள்.

"அந்த பேப்பர்ல ரெட்ல ஒரு இடத்துல மார்க் பண்ணியிருக்கத படிச்சு பாருங்க"

சிவப்பால் எதையோ வட்டமிட்டிருந்தாள்.அதில்"பிரபல லாயரான ஆராதனாவும் அவரது உதவியாளரான ஜீவாவும்" என்ற வரிகள் அடிக்கோடிடப்பட்டிருந்தன.

"என்னங்க இது,நான் எப்ப உங்க கிட் அஸிஸ்டென்டா வேலைக்கு சேர்ந்தேன்?"

"கூல் டவுன் ஜீ,பேப்பர்ல எவனோ தப்பா போட்டிருக்கான்,பட் அந்த தப்புலயும் ஒரு நல்ல விஷயம் இருக்கு,நான் என் சொல்ல வாரேன்னு புரியுதா?"

"நல்லாவே புரியுது,என்னால உங்ககிட்ட அஸிஸ்டண்டா எல்லாம் இருக்க முடியாது"என்றேன் கரராக.ஆனால் கைகளில் இருந்த கவர் டாலடிக்கவும் மனம் குழம்பியது.
"வேணும்னா பார்ட்னரா இருக்கேன்,ஒகேவா?"என்றேன்.

"பார்ட்னரா......ம் இதபத்தி நான் கொஞ்சம் யோசிக்கனும்"

"யோசிங்க,பட் நான் கேக்குறதுக்கு இப்ப பதில சொல்லுங்க"என்றவாறு என் கையில் இருந்த ஒரு குறிப்பை எடுத்து அவளிடத்தில் நீட்டினேன்.

"இது அன்னைக்கு நீங்க தந்த நோட்தான்.ஞாபகம் இருக்கா"

""கோப்பு சேதமடைந்தாலோ,காணாமல் போனாலோ நீங்கள்தான் அதற்கு முழுப்பொறுப்பு-ஜெ.ஆராதனா"ஆமா இத நான்தான் கொடுத்தேன்"என்றாள் பலவீனமாக.

"உங்கப்பா பெயர் எஸ்ல தானே ஸ்டார்ட் பண்ணும்.பின்ன ஏன் இதுல ஜெ.ஆராதானானு போட்டு இருக்கு?"என்றேன்.

அவள் பதில் கூறவில்லை,மாறாக ஒரு வெட்கப் புன்னகையை உதிர்த்தாள்.அதற்கு என்ன அர்த்தம் என்பதை சைதாப்பேட்டை சாமியார்தான் எனக்கு கூறவேண்டும்.



2 comments:

  1. sherlock holms ஸ்டைலந்் செம்யா இருக்கு தல, வாழ்த்துக்கள்,ஆராதனா தான் இடிக்குது

    ReplyDelete

//]]>