Related posts

Breaking News

துப்பறிவாளன்




மிஷ்கின்,மற்ற அத்தனை எழுத்தாளர்களையும் போன்றுதான் இவரும்.தன் வாழ்வில் படித்த,அனுபவித்த,தன்னை பாதித்த விடயங்களை தன்னுடைய கதைக்கு ஏற்றவாறு எழுதுகிறார்.எப்படி ந.மோ டீ ஆற்றுவதில் தனக்கென ஒரு தனி பாணி வைத்துள்ளாரோ அதே போல்தான் திரைப்படம் எடுப்பதில் மிஷ்கின்னும் தனக்கென ஒரு பாணி வைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே நிறை அல்லது குறை என்ன என்றால் அவர் வாசித்த கதைகளில் அல்லது பார்த்த படங்களில் காட்டப்படும் விஷயங்களை அப்படியே தன் பாணியில் எடுப்பதுதான்.மிஷ்கினிடம் நான் பார்த்த ஒரு இம்சையான விடயம் இதுதான். 
இருப்பினும் யுத்தம் செய்,பிசாசு,அஞ்சாதே போன்ற படங்களில் மேற்கூறிய இம்சை மிகவும் குறைவு.அதனால் அந்த படங்களும் புத்துணர்வோடு இருந்தன.முகமூடி,இன்றுவரை எனக்கு திருப்தியான படங்களில் ஒன்றுதான்.ஆனால் அதில் Batman கதாபாத்திரத்தை இன்ஸ்பையர் செய்யாமல் நோலனின் டார்க்(K)நைட்டை நகல் செய்து படத்தை எடுத்ததால் அவருடைய ரசிகர் வட்டாரத்திலும் கூட முகமூடியால் நல்ல வரவேற்பை பெற முடியாமல்போனது.

இப்போது துப்பறிவாளன்,"ஷெர்லாக் ஹோம்ஸை தழுவிதான் துப்பறிவாளனை எடுத்துள்ளேன்" என அவரே டைட்டில் காரட்டில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.இந்த வெளிப்படை,பாரட்டத்தக்கது.

படத்தின் கதை,பல ஐம்பது ரூபா "கிரைம் நாவல்"களில் அல்லது அதிக விலையோடு வரியும் சேர்த்து கொடுத்து வாங்கிப்படிக்கும் ஆங்கில கிரைம் பெஸ்ட் செல்லர்களிலும் நாம் படித்த கதைதான்.தொடக்கத்திலேயே கதை புரிந்துவிடுவதால் அதை எவ்வாறு காட்சிபடுத்தியுள்ளார் என்ற கோணத்தோடு படத்தை பார்க்கலானேன்.காமிரவை வித்தியாசமான கோணங்களில் கையாள்வது,கத்தி சண்டைகள்(அதில் கதாநாயகர் கைக்கு கத்தி கிடைத்ததும் எதிராளியின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவார்),ஓவியங்கள் மற்றும் இசையோடு பயணிக்கும் கதை,திடமான குறிக்கோள் இல்லாத வில்லன்,சுரங்கபாதைகளில் நடக்கும் கூத்துக்கள் என அத்தனை மிஷ்கின் பட காட்சிகளும் இதில் உள்ளன.ஆயினும் அதை தெவிட்டாத விதத்தில் காட்சிபடுத்தியுள்ளார்.
படம் சீராக சென்று கொண்டிருக்கும் பொழுது இடையிடையே மிஷ்கின்தனமான சினிமா எட்டிபார்த்து சலிப்பூட்டுகிறது.என்றாலும் அதே மிஷ்கின்தானமான வேறு சில காட்சிகள் கவனத்தை ஈர்க்கவும் தவறவில்லை.உதாரணமாக பாக்கியராஜ் வரும் அந்த இறுதிகாட்சி,ரெட் டிராகன் சண்டை காட்சி மற்றும் மிகமுக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி என்பன  நன்றாக இருந்தன.

விஷால்,நல்ல தேர்வு,ஆயினும் கொஞ்சம் கேஷுவலான நடிப்பு இன்னுமே தேவை.கதாநாயகன் கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் கணிப்பதாக நினைத்துக்கொண்டு டீடெய்லிங்கே இல்லாமல் வாய்விடுவது பொருந்தவில்லை. (உடைந்த கண்ணாடிக்கு ரப்பர் பேண்ட் போட்டுள்ளதால் கண்டிப்பாக கணவன் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்க வேண்டுமென்பதில்லை,டிரைவரோடு ஓடிப்போனவள் அதே டிரைவரின் கையால் கூட இறப்பதற்கு  வாய்ப்புண்டு).துல்லியமான துப்பறிவாளன் என காட்டப்படும் கனியன் பூங்கன்றனது கதாபாத்திரம் சாதாரண விஷயங்களை கூட ஊகிக்க முடியாமல் தடுமாறுவது கதாபாத்திர முரணாக உள்ளது.தனக்கு நெருக்கமாக உள்ளது இருவரே,அதை கூட அவரால் கணிக்க முடியவில்லை.அதே நேரம்,ஹீரோ தகவல்களை சேமிக்க மற்றையவர்களை பயன்படுத்துகின்ற விதம் நன்றாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
வில்லன்,இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமே இவரது கதாபாத்திரத்தை,பல இடங்களில் வில்லனும் அவனது குழுவும் மடையர்களாக செயற்படுகிறார்கள்.ஒரே பொட்டில் ஹீரோவை போட்டுத்தள்ளாமல் சினிமாத்தனமாக ஏதேதோ செய்கின்றனர்.
அதைப்போல,ஹீரோயின் தவிர மற்ற எந்த கதாபாத்திரத்திற்கும் ஆழமானதொரு கதாபாத்திர பிண்ணனி கிடையாது.
இது போல சீராக செல்லும் படத்தில் பல நெருடல்கள்.

வயலின் சூழ்ந்த இசை நன்றாக உள்ளது.தொடர்ந்து தன் படங்களில் வயலினையும் ஒரு கதாபாத்திரமாக பயன்படுத்திவருபவர் மிஷ்கின்.துப்பறிவாளனும் அதற்கு விதிவிலக்கல்ல.

படத்தை எந்த நாயில் தொடங்கினாரோ அதே நாயில் முடித்துள்ளது நன்றாக இருந்தது,பிடித்துமிருந்தது.கிளைமாக்ஸில் வரும் சண்டைகாட்சி அப்படியே முகமூடி படத்தில் வைத்த காட்சிதான்.ஒரு சிறு வித்தியாசமென்னவெனில் முகமூடியில் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்த அதேபார்வையாளர்களிடம் இப்போது கைதட்டல்களை வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதுதான்..!

No comments

//]]>