Avengers:Infinity War(2018)

7:43 AM Kavinth Jeev 2 Comments

மார்வலின் பத்து வருட உழைப்பு.ரசிகர்களுக்கு எதை கொடுக்க வேண்டுமென நினைத்தார்களோ அதை கொடுத்துவிட்டார்கள்.அந்த படைப்பு எனது கண்ணோட்டத்தில் எப்படியிருந்தது என பார்ப்போம்.கதை Infinity Gauntletல் நடந்த கதைதான்.பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு(Big Bang) நிகழ்ந்த போது அதன் அடிப்படை சக்திகளைக்கொண்ட ஆறுகற்கள் தோன்றின.அவையான முறையே நேரம்,அண்டவெளி,மாய/நிஜ தோற்றம்,சக்தி,உயிர்,மனது/மூளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இக்கற்களை சாதாரண மனிதர்களால் கையாள முடியாது.டைட்டன் கிரகத்தை சேர்ந்த மியூட்டனான தானோஸ் என்பவன் இவ்வாறு கற்களையும் அடைந்து பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் எண்ணிக்கையை பாதிக்கு பாதியாக குறைக்க விளைகிறான்.அதை தடுக்க நினைக்கிறார்கள் அவென்ஜர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோக்கள்.விளைவு என்ன...

அப்படியே அம்புலிமாமாவில் வந்த கதைகளில் ஏதோ ஒன்றினை போல உள்ளதல்லவா?நம்மில் யாராவது இதைப்போன்ற கதையை சொன்னாலோ அல்லது எழுதினாலோ சல்லிகாசு கூட  பெறாது.இதே அமெரிக்கவாசிகள் எழுதி இயக்கினால் "வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தாயா" என கைதட்டிக் கொண்டே பார்ப்போம்.நினைவிருக்கட்டும் இந்த அம்புலிமாமா கதைகள்தான் பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை வசூல் செய்யப்போகிறது.(ஏற்கனவே வசூலித்தும் இருக்கிறது).இதுதான் மேற்குலகினர் கற்பனாசக்திக்கு கொடுக்கும் மரியாதை.

ஆமாம்,படம் நன்றாகவே உள்ளது ஆனாலும் சில பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை.Spoilers Alert.

தானோஸின் முன் கதை திருத்தமாக காட்டப்படவில்லை.இத்தனை ஹீரோக்களுக்கும் தனிதனிப் படங்களை தந்தவர்கள் இத்தனை பேரோடும் மல்லுக்கட்டப்போகும் கதாபாத்திரத்தின் கதையை சரியாக பின்னவில்லை.அதேவேளை புத்தகங்களில் தானோஸின் கதை கச்சிதமாக பின்னப்பட்டிருக்கும் ஆனால் இதில் சற்றே அறைகுறை.மேலும் தானோஸ் என்பவன் இதில் வில்லனேயில்லை.அவனது கிரகத்தில் சனத்தொகை பெருக்கத்தால் வளங்கள் குன்றி அத்தனை மக்களும் இறந்ததுபோல வேறு கிரகங்களிலும் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் இதையெல்லாம் செய்கிறான்.அவன் தன்னை ஏமாற்றுபவர்களை கொல்கிறான்.தன்னை எதிர்பவர்களோடு நேருக்கு நேர் நியாயமாக போராடுகிறான்.இந்த பிரபஞ்சத்தில் தான் நேசித்த அந்த ஒற்றை ஜீவனையும் தியாகம் செய்துவிட்டு கண்ணீர் விடுகிறான்.எதற்காக ஏனைய உயிரினங்கள் அடியோடு அழிந்து விடக்கூடாது என்பதற்காக.ஆக இது சிவில் ஃவோர் போன்ற இரு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களின் மோதலாக இருக்கிறதே தவிர பலம் பொருந்திய வில்லனாக இவன் வலம் வரவில்லை.

அத்தோடு நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் அத்தனை பேரையும் சமமாக காட்ட முடியாதுதான் ஆனால் நிறைய ஹீரோக்கள் டிரெய்லரில் வருவது போல் கொஞ்ச நேரமே வருகிறார்கள் அல்லது சொற்ப அளவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.ஒன்றிரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அடர்த்தியான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்.ஸ்டேரன்ஜ்,டைம் ஸ்டோனை பயன்படுத்தவேயில்லை.அப்படியே அதை தானோஸிடம் தூக்கி கொடுக்கிறார்.யாரேனும் இறந்தால் கூட டைம் ஸ்டோன் மூலம் மீட்டுவிடலாம்.ஆகவே அதுதான் மிகவும் முக்கியம்.அத்தோடு அவர் டோர்மாம்முவிடம் பயன்படுத்தியதைப்போல டைம் ஸ்டோனை பயன்படுத்த முயற்சி கூட எடுக்கவில்லை. மேலும் டாக்டர் or டொக்டர்.ஸ்டேரேன்ஜின் சக்தியின் மூலம் தானோஸின் உடலை வெட்டிவிடலாம்(அவனது உடலை இரண்டு வெவ்வேறு இடங்களுக்கு கடத்துவதன் மூலம்).ஆனால் அதையெல்லாம் படத்தில் அவர் பயன்படுத்தவேயில்லை.அத்தோடு க்ரூட் ஏன் எந்த நேரமும் கையில் கேம் பேடை வைத்து தட்டிக்கொண்டிருக்கிறது,கற்பனை வரட்சியா?

தோர்,பிண்ணியுள்ளார்.கிறிஸ்ன் அந்த ஒற்றை சிரிப்புக்கே படம் பார்க்கலாம் ஆனால் சகோதரன் இறந்தபோது கதறி அழுது சொற்ப நேரமே கடந்த பின்னர் சிரித்துக்கொண்டிருப்பது நெருடுகிறது.இறுதிகட்ட சண்டையிலும் காணாமல் போய் திடீரென மீண்டும் எங்கிருந்தோ குதிப்பதேனோ.இருந்தாலும் தோர் மட்டும்தான் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார்,மற்ற அனைவரையும் விட.தானோஸை வென்ற ஒரே கதாபாத்திரம் தோர்தான் என்பதை ஆணித்தரமாக புரியவைத்துள்ளனர். மேலும் நான் நினைத்தது போலவே கடவுளை கடவுளைப்போலவே மிகப்பொருத்தமாக காட்டியுள்ளனர்.

கண்டிப்பாக இதைப்போன்றதொரு படத்தை எடுப்பது மிகவும் கடினம்.முடிந்தளவு நியாயமாக எடுத்துள்ளார்கள் மேலும் தானோஸ் மற்றும் அவனது படைக்கு எதிராக தோர் ஒற்றையில் நின்று சண்டைபோடும் காட்சிகளை அருமையாக வழங்கியுள்ளனர்.இருப்பினும் படம் ஆரம்பித்ததில் இருந்தே மெதுவாகதான் செல்கிறது.அப்படியே திரைக்கதை கொஞ்சமாக ஆர்வமெழுப்பும் போது படம் முடிந்துவிடுகிறது.குறிப்பாக வாகாண்டாவில் நடக்கும் போர் காட்சிகள்தான் மெய்ன் ஹைலைட்ஸ்.அங்கேதான் படமே துவங்குகிறது என்பேன்.


அயன்மேனாக ரொபர்ட் மீண்டும் ஒரு தடவை அருமையாக நடித்துள்ளார்.இவரது நடிப்பு தனித்து தெரிகிறது.அடுத்த அவென்ஜர்ஸ் படத்திலும் இவர் வரப்போகிறார் என்பது நற்செய்தி.

இசை,நான் எந்தவொரு படத்திலும் மிகமுக்கியமாக கவனிக்கும் கூறுகளில் ஒன்று.இசைதான் படத்தின் குறைகளை தாங்குவதோடு நிறைகளுக்கு மேலும் வழு சேர்க்கும் கருவி.எனினும் இங்கு பாதி இடங்களில் இசை தேறவில்லை இருப்பினும் Frame by frame அருமையான CGயை கவனிப்பதிலேயே நேரம் செல்வதால் இந்த குறைகள் மறைந்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக தானோஸ் முழுக்கவே ஃகிராபிக்ஸ் என்பதை மறுக்க வைக்கிறது CG.

33% இட ஒதுக்கீடு போல பெண் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்ளும் காட்சியை அருமையாக வார்த்துள்ளார்கள்.அத்தோடு அத்தனை பெண் கதாபாத்திரங்களும் கெத்தாக நடித்துள்ளனர்.

ஹல்க் டிரெய்லரில் காட்டியது போல இதில் இல்லை.ஏமாற்றிவிட்டார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் டிரெய்லரில் காட்டிய சில சீன்கள் படத்தில் இல்லாதது ஏமாற்றமே.

சீரியஸான திரைக்கதையில் நகைச்சுவையை திணித்து உள்ளது தனியாக தெரிகிறது.கதையை அதை போக்கிலேயே விட்டிருக்கலாமே.ஏஜ் ஒஃப் அல்ட்ரான் போல தேவைப்பட்ட இடங்களில் மட்டும் நகைச்சுவையை தூவியிருக்கலாம்.

மேலும் படத்தில் எனக்கிருந்த பிர்ச்சினை,ஏற்கனவே காமிக்ஸ்களில் அழுந்தந்திருத்தமாக காட்டப்பட்ட நிகழ்வுகள் காட்சிகளாக்கப்பட்டிருந்ததால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.அதாவது யாருக்கு நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.குறிப்பாக தானோஸ் கமோராவின் மேல் அளவுகடந்த பாசம் வைக்கும் காட்சிகள்,நெப்புயுலாவை கொடுமைபடுத்துவது மற்றும் இறுதியில் காற்றில் கரையும் மனிதர்கள் போன்ற காட்சிகள்.

End creditsல் கேப்டன் மார்வலுக்கான வரேவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தின் முடிவு பாகுபலியை ஞாபகமூட்டியது என்பதே உண்மை.ஆக தோர் வரும் காட்சிகளுக்காகவும் கிராஃபிக்ஸ் துல்லியத்திற்காகவும் படத்தை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் பார்க்கலாம்.

நமது உலகிலும் சனத்தொகை பெருகி விட்டது.வளங்கள் குன்றுகின்றன.எங்கு பார்த்தாலும் நோய்கள்.மனிதாபிமானமற்ற செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இங்கும் சனத்தொகையை குறைக்க வேண்டும்.குறைக்கவும் போகிறார்கள்.அதுவும் தானோஸ் வழியில்...புரியவில்லையா.மூன்றாம் உலகப்போர் விரைவிலேயே வரப்போகிறது,காத்திருங்கள்.

A.P:-Doctor.Strange டைம் ஸ்டோனை தானோஸுக்கு கொடுத்ததன் காரணத்தை கண்டறிய முடிந்தது.ஒரு கட்டத்தில் அவர் தானோஸை முறியடிப்பதற்கான வழிகளை எதிர்காலத்தை கணிப்பதன் மூலம் கண்டறிய முயல்வார்.அப்போது "மில்லியன் கணக்கான வழிகளில்(Possible ways) யோசித்தேன்,அதில் ஒரே ஒரு சாத்தியமான வழியை மட்டுமே கண்டறிந்தேன்" என்பார்.ஆக தானோஸை முறியடிக்கும் அந்த சாத்தியமான வழி டோனி ஸ்டார்க் மூலமே நிறைவேறப் போகிறது.அதானால்தான் டோனியின் உயிரைக்காப்பாற்ற டைம் ஸ்டோனை தானோஸிடம் கையளித்தார் போலும்.


2 comments:

  1. அருமையான விமர்சனம் kaavinth. அனைத்து காட்சிகளையும் அலசி ஆராய்ந்துள்ளீர்கள். Strange டைம் ஸ்டோன் உபயோக படுத்தாதற்கும் தானோஸிடம் கொடுத்தற்கும் காரணத்தை அவரே கூறி இருப்பார். அவர் வரும்காலத்தில் தானோசை வெல்ல இருந்த ஒரே possibility இது தான் என கூறி இருப்பார். அது என்ன என்று இரண்டாம் பாகத்தில் தான் தெரியும்.

    ReplyDelete